'பொது இடத்தில் பயன்படுத்தாத வாகனங்களுக்கு வரி கூடாது'
'பொது இடத்தில் பயன்படுத்தாத வாகனங்களுக்கு வரி கூடாது'
'பொது இடத்தில் பயன்படுத்தாத வாகனங்களுக்கு வரி கூடாது'
ADDED : செப் 02, 2025 02:43 AM
புதுடில்லி: ஆந்திராவில் உள்ள மத்திய அரசின், 'விசாகப்பட்டினம் ஸ்டீல்' நிறுவனத்தில் சரக்குகளை கையாளும் பணியை, 'தாரா சந்த் லாஜிஸ்டிக்' நிறுவனம் 2020 முதல் செய்து வருகிறது.
இதற்காக, 36 வாகனங்களை வாங்கி அந்நிறுவனத்தின் வளாகத்திற்குள் இருந்த சேமிப்பு கிடங்கில் சரக்குகளை கையாள பயன்படுத்தி உள்ளனர். குறிப்பிட்ட காலம் வரை பொது சாலைகளை பயன்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
எனவே, மோட்டார் வாகன வரியிலிருந்து விலக்கு கோரினர். இதை ஆந்திரா சாலை போக்குவரத்து அதிகாரிகள் நிராகரித்தனர். இதை எதிர்த்து நிறுவனம் சார்பில் ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நிறுவனத்தின் வாதத்தை ஏற்று, வசூலிக்கப்பட்ட மோட்டார் வாகன வரி 22 லட்சம் ரூபாயை திருப்பியளிக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை மற்றொரு அமர்வு ரத்து செய்தது.
இதை எதிர்த்து நிறுவனத்தினர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் வாகனங்கள் மத்திய தொழில்பாதுகாப்பு படையின் காவலுக்கு உட்பட்ட மூடப்பட்ட வளாகத்திற்குள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொது உட்கட்டமைப்பை பயன்படுத்தவில்லை. எனவே வாகனங்களுக்கு வரி வசூலிக்க கூடாது.
இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.