நிகழ்ச்சி ஏற்பாட்டில் தவறு நடந்துள்ளது: பெங்களூரு சம்பவம் குறித்து பி.சி.சி.ஐ., கருத்து
நிகழ்ச்சி ஏற்பாட்டில் தவறு நடந்துள்ளது: பெங்களூரு சம்பவம் குறித்து பி.சி.சி.ஐ., கருத்து
நிகழ்ச்சி ஏற்பாட்டில் தவறு நடந்துள்ளது: பெங்களூரு சம்பவம் குறித்து பி.சி.சி.ஐ., கருத்து

மும்பை: '' பெங்களூருவில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட விவகாரத்தில் தவறு நடந்துள்ளது. அதற்கு காரணமானவர்கள் தப்பிக்க விடக்கூடாது,'' என பி.சி.சி.ஐ., கூறியுள்ளது.
பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக பி.சி.சி.ஐ., செயலாளர் தேவ்ஜித் சைகியா கூறியதாவது: இதுபோன்ற நிகழ்ச்சிகளை பி.சி.சி.ஐ., ஏற்பாடு செய்யும் போது உரிய முன்னேற்பாடுகளை செய்யும். கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை வென்ற பிறகு, நடந்த பாராட்டு விழாவில் மும்பை கிரிக்கெட் சங்கம், போலீசார், தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு படையினர் உரிய முன்னேற்பாடுகளை செய்தனர்.
மும்பையில் நடந்த மிகப்பெரிய பாராட்டு விழாவில், மக்கள் கடல் போல் திரண்டு இருந்த போது எல்லாம் சுமூகமாக நடந்தது. அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டதால், ஒரு விரும்பத்தகாத சம்பவங்கள் கூட நடக்கவில்லை.
இது போன்ற திட்டமிடல் செய்ய அவகாசம் தேவை. அவசரகதியில் செய்ய முடியாது. பெங்களூருவில் நிச்சயம் தவறு நடந்து இருக்கும். தவறுக்கான காரணத்தை கண்டுபிடிக்க அதிகாரிகள் முயற்சி செய்வார்கள் என நம்புகிறேன். தவறு செய்தவர்கள் தப்பிக்க அனுமதிக்கப் பட மாட்டார்கள்.
இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. பிரபலத்தின் எதிர்மறையான பக்கமாகும். கிரிக்கெட் வீரர்கள் மீது மக்கள் அதிக ஆர்வம் கொண்டு உள்ளனர். ஏற்பாட்டாளர்கள் உரிய திட்டமிடல் செய்து இருக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல். காயமடைந்தவர்கள் குணமடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பெங்களூரு அணி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: பெங்களூரு அணியை வரவேற்பதற்காக திரண்ட கூட்டத்தில் நடந்த துயர சம்பவம் குறித்து மீடியாக்கள் மூலம் அறிந்து வேதனை அடைந்தோம். ஒவ்வொருவரின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம். கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம். அவர்களின் குடும்பத்தினருக்கு எங்களின் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
கூட்டநெரிசல் குறித்த தகவல் கிடைத்ததும், அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில் நிகழ்ச்சியை பாதியில் முடித்து விட்டோம். எங்களின் ஆதரவாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறோம், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.