Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/வக்ப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதோரை நியமிப்பதில் எந்த தவறும் இல்லை: மத்திய அரசு

வக்ப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதோரை நியமிப்பதில் எந்த தவறும் இல்லை: மத்திய அரசு

வக்ப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதோரை நியமிப்பதில் எந்த தவறும் இல்லை: மத்திய அரசு

வக்ப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதோரை நியமிப்பதில் எந்த தவறும் இல்லை: மத்திய அரசு

UPDATED : மே 23, 2025 03:16 AMADDED : மே 23, 2025 12:53 AM


Google News
Latest Tamil News
'வக்ப் வாரியம் என்பது நிர்வாகம் சார்ந்தது என்பதால், அதில் முஸ்லிம் அல்லாதோரை நியமிப்பதில் எந்த தவறும் இல்லை' என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

உத்தரவு


வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூன்று நாட்களாக நடந்து வருகிறது.

மூன்றாவது நாளாக நேற்று மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களை முன் வைத்தார்.

அவர் வாதிட்டதாவது:


வக்ப் பெயரில் பல பழங்குடி மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. இது அரசியலமைப்புக்கு எதிரானது.

முஸ்லிம்களின் ஷரியத் சட்டத்தின்படி, ஒருவர் சட்டத்தின் பலன்களை அனுபவிக்க வேண்டும் என்றால், அவர் முஸ்லிம் என்பதை நிரூபிக்க வேண்டும் என சொல்கிறது; அதையேதான் வக்ப் திருத்த சட்டத்தில் அரசும் தெரிவித்துள்ளது.

வக்ப் வாரியம் என்பது வெறும் நிர்வாகம் சார்ந்தது என்பதால், அதில் முஸ்லிம்கள் அல்லாதவரை நியமிப்பதில் எந்த பிழையும் கிடையாது.

நியமிக்கப்படும் நபர் நிர்வாகத்திறமை கொண்டவரா என்பது மட்டும்தான் முக்கியம். வக்ப் சொத்துக்கள் சரியாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற பரந்த நோக்கத்துடன் தான், இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

வக்ப் சட்டத்துக்கு ஆதர வான மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிட்டதாவது:

ஒரு நபர், தன் சொந்த சொத்தை மட்டுமே வக்பாக வழங்க முடியும் என முஸ்லிகளின் சட்டம் கூறுகிறது. அப்படி இருக்கும்போது, வக்ப் வாரியம் தானாக முன்வந்து இது வக்ப் வாரியத்துக்கு சொந்தமான சொத்து என அறிவிக்க எந்த அதிகாரமும் கிடையாது.

சம்பந்தப்பட்ட நபருடைய சொத்து வக்ப் சொத்து என அறிவிக்கப்பட்டால், அந்த நபர் நீதிமன்றத்திற்கு தான் செல்ல முடியும்.

காணிக்கை


பெரும்பாலான நேரங்களில், ஒருவரது சொத்து வக்ப் சொத்தாக அறிவிக்கப்பட்டிருந்தால், இந்த விஷயம், அந்த நபருக்கு பல ஆண்டுகளாக தெரியாமலேயே போய்விடும். ஆனால், தற்போது இந்த பிரச்சனைகள் அனைத்தும் புதிய திருத்த சட்டத்தால் தீர்க்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

சட்டதிட்டத்திற்கு எதிரான மனுதாரர்கள் சார்பில் ஆஜரான கபில் சிபல் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வாதிட்டதாவது:

இந்த விவகாரத்தை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி விடை கண்டதற்கு பின்தான், தற்போது விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்.

மேலும், வக்ப் என்பது கடவுளுக்காக கொடுக்கப்படும் காணிக்கை.

ஒருமுறை கொடுத்து விட்டால் அதை திரும்பப் பெற முடியாது. முஸ்லிம் மதத்தின் அடிப்படை துாண்களில் ஒன்றான ஈகையின் வடிவம் தான் வக்ப். ஆனால் அதை, முஸ்மிம்களின் கட்டாய மத வழிபாடு முறை இல்லை என மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது. இந்த விஷயத்தில் பிரபுக்கள் போன்று மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதை ஏற்க முடியாது.

இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், 'முஸ்லிம் மதத்தில் மட்டு மல்ல ஹிந்து உள்ளிட்ட மற்ற மதங்களில் கடவு ளுக்கு காணிக்கை கொடுக்கப்படுகிறது.

'அவை திரும்ப பெறப்படுவதில்லை. எல்லா மதங்களுமே சொர்க்கத்துக்கு போவதை தான் பேசுகின்றன. எந்த ஒரு விஷயத்தையும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என நிரூபிக்க வலுவான ஆதராங்கள் தேவை' என்றனர்.

இதையடுத்து ஏற்கனவே இந்தச் சட்டத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை தொடர்வதா அல்லது நீக்குவதா என்பது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் இன்றைய அலுவல்கள் முடிந்தவுடன் கோடை விடுமுறை துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வக்ப் சொத்தாகி விட்டது'


திருச்சி மாவட்டத்தின் திருச்செந்துறை என்ற கிராமமே வக்ப் சொத்து என வகைப்படுத்தப்பட்டு உள்ளதாக, அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
வக்ப் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரியதர்ஷினி, ''சோழர் காலத்தில் ஆதித்ய சோழனால் கட்டப்பட்ட கோவில், இந்த கிராமத்தில் உள்ளது; அது கூட வக்ப் சொத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுபோன்று பல கிராமங்கள் வக்ப் சொத்துக்களாக அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்,'' என, முறையிட்டார்.



- டில்லி சிறப்பு நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us