'மத்தியஸ்தம் செய்யும்படி அமெரிக்காவை வற்புறுத்த வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை': சசி தரூர்
'மத்தியஸ்தம் செய்யும்படி அமெரிக்காவை வற்புறுத்த வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை': சசி தரூர்
'மத்தியஸ்தம் செய்யும்படி அமெரிக்காவை வற்புறுத்த வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை': சசி தரூர்
ADDED : ஜூன் 04, 2025 04:50 AM

புதுடில்லி: “பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தில் மூன்றாம் நபரின் தலையீடு இல்லை; மத்தியஸ்தம் செய்யும்படி வற்புறுத்த வேண்டிய தேவையும் எங்களுக்கு இல்லை,” என, காங்கிரஸ் - எம்.பி., சசி தரூர் தெரிவித்துள்ளார்.
'ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளை வெளிநாடுகளுக்கு விவரிக்க சென்ற காங்., - எம்.பி., சசி தரூர் தலைமையிலான குழு, தென் அமெரிக்க நாடான பிரேசில் தலைநகர் பிரேசிலியாவுக்கு நேற்று சென்றது.
அந்நாட்டு பிரதிநிதிகளை சந்தித்து நம் நாட்டின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தது. அதன்பின் அக்குழுவின் தலைவர் சசி தரூர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
அமெரிக்க அதிபர் பதவியின் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது; எனவே, அந்த மரியாதையை மனதில் வைத்தே நாங்கள் பேசுவோம். பாகிஸ்தான் உடன் மோதலை நிறுத்தும்படி, யாரும் எங்களை வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை. நாங்கள் ஏற்கனவே நிறுத்தும்படி கூறினோம்.
நாங்கள் போரை விரும்பவில்லை என்பதால் நாங்கள் வற்புறுத்த வேண்டிய தேவையில்லை. எனினும், பாகிஸ்தான் தரப்பில் வற்புறுத்தி இருக்க வாய்ப்புள்ளது. மே 7ம் தேதி துவக்கத்தில் இருந்தே மோதலை நீடிப்பதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை என கூறி வந்தோம்.
வளர்ச்சியில் கவனம் செலுத்த விரும்புகிறோம். பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கவே நாங்கள் தாக்குதலை நடத்தினோம். இல்லை எனில் தாக்குதல் நடத்தி இருக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
சசி தரூர் தலைமையிலான குழு, பிரேசிலில் இருந்து அடுத்ததாக அமெரிக்கா செல்கிறது. இந்த நேரத்தில் இப்படியொரு கருத்தை அவர் வெளிப்படுத்தி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.