நாட்டின் பணக்கார எம்.எல்.ஏ.,வின் சொத்து... ரூ. 3,400 கோடி! மும்பை பா.ஜ.,வின் பராக் ஷா 'கெத்து'
நாட்டின் பணக்கார எம்.எல்.ஏ.,வின் சொத்து... ரூ. 3,400 கோடி! மும்பை பா.ஜ.,வின் பராக் ஷா 'கெத்து'
நாட்டின் பணக்கார எம்.எல்.ஏ.,வின் சொத்து... ரூ. 3,400 கோடி! மும்பை பா.ஜ.,வின் பராக் ஷா 'கெத்து'
ADDED : மார் 20, 2025 04:11 AM

புதுடில்லி: நம் நாட்டு எம்.எல்.ஏ.,க்களில் மிகப்பெரிய பணக்காரராக, 3,400 கோடி ரூபாய் சொத்துகளுடன் மஹாராஷ்டிராவின் பா.ஜ., எம்.எல்.ஏ., பராக் ஷா முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தை, 1,413 கோடி ரூபாய் சொத்துகளுடன் காங்.,கைச் சேர்ந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பிடித்துள்ளார்.
நம் நாட்டின், 28 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 4,092 எம்.எல்.ஏ.,க்களின் சொத்து மதிப்பை ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களின்போது, வேட்புமனுவில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
பட்டியல்
இதில், 24 எம்.எல்.ஏ.,க்களின் பிரமாண பத்திரங்களில் தெளிவான விபரங்கள் இல்லை. ஏழு இடங்கள் காலியாக உள்ளன. மீதமுள்ள 4,092 எம்.எல்.ஏ.,க்களின் சொத்து விபர பட்டியலை ஏ.டி.ஆர். வெளியிட்டது.
அதில், 3,400 கோடி ரூபாய் சொத்துகளுடன், மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த கிழக்கு காட்கோபர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., பராக் ஷா முதலிடத்தில் இருக்கிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்.
நம் நாட்டிலேயே மிகவும் ஏழையான எம்.எல்.ஏ., நிர்மல் குமார் தாரா. மேற்கு வங்கத்தின் இந்துாஸ் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வான இவரிடம் வெறும் 1,700 ரூபாய் மட்டுமே இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணக்கார பட்டியலில் இரண்டாவது இடத்தில், கர்நாடகாவின் கனகபுரா தொகுதி எம்.எல்.ஏ.,வும் அம்மாநில துணை முதல்வருமான டி.கே.சிவக்குமார் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 1,413 கோடி ரூபாய்.
கர்நாடகாவின் சுயேச்சை எம்.எல்.ஏ., புட்டசாமி கவுடாவுக்கு 1,267 கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. இவர் மூன்றாவது பெரிய பணக்காரர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு 931 கோடி ரூபாய். இவர் கோடீஸ்வர எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
பட்ஜெட்
கோடீஸ்வர எம்.எல்.ஏ.,க்களின் மொத்த சொத்து பட்டியலில் ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகியவைதான் கோலோச்சுகின்றன. தமிழகம், 7வது இடத்தில் உள்ளது. நாட்டிலேயே மிக அதிகமாக கர்நாடகாவின் 223 எம்.எல்.ஏ.,க்களின் மொத்த சொத்து 14,179 கோடி ரூபாய்; மிகக் குறைவாக, திரிபுராவின் 60 எம்.எல்.ஏ.,க்களின் மொத்த சொத்து மதிப்பு 90 கோடி ரூபாய்.
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு 757 கோடி ரூபாய். டாப் 10-ல் நான்கு பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். சந்திரபாபு நாயுடுவின் மகனும் ஆந்திர அமைச்சருமான நர லோகேஷ், டாப் 20 பட்டியலில் இருக்கிறார்.
கணக்கெடுப்பின் படி, 4,092 எம்.எல்.ஏ.,க்களின் மொத்த சொத்தான 73,348 கோடி ரூபாயைக் கொண்டு, நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ஓராண்டுக்கான பட்ஜெட் போட்டு விடலாம்.
இதுபோல, 1,861 எம்.எல்.ஏ.,க்கள் அதாவது 45 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் மீது, கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர்களில், 1,205 பேர் மீது கொலை, கொலை முயற்சி, வன்முறை, பெண்களுக்கு எதிரான கொடுமை என கொடுங்குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பட்டியலில் கூறப்பட்டுள்ளது.