தினமலர் தலையங்கம்: புதிய குடியுரிமை மசோதா மோடி அரசின் சரியான முடிவு!
தினமலர் தலையங்கம்: புதிய குடியுரிமை மசோதா மோடி அரசின் சரியான முடிவு!
தினமலர் தலையங்கம்: புதிய குடியுரிமை மசோதா மோடி அரசின் சரியான முடிவு!

இந்தியாவுக்குள் வரும் வெளிநாட்டினர் வருகையை நிர்வகிக்க, பாஸ்போர்ட் சட்டம் - 1920, வெளிநாட்டினர் பதிவு சட்டம் - 1939, வெளிநாட்டினர் சட்டம் - 1946 மற்றும் குடியுரிமை சட்டம் என, நான்கு விதமான சட்டங்கள் தற்போது அமலில் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்தச் சட்டங்களை ஓரங்கட்டிவிட்டு, புதிய குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீர்மானித்து, சமீபத்தில் லோக்சபாவில், குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் மசோதா - 2025ஐ தாக்கல் செய்தது.
இந்த சட்டம் அமலுக்கு வந்தால், போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைந்தாலோ அல்லது தங்கியிருந்தாலோ அல்லது இந்தியாவை விட்டு வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டாலோ, ஏழு ஆண்டு சிறை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மேலும், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ சிகிச்சை போன்றவற்றுக்காக, நீண்டகால விசாவில் இந்தியா வரும் வெளிநாட்டினர், 14 நாட்களுக்குள், வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதேநேரத்தில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்றால், 24 மணி நேரத்தில் பதிவு செய்ய வேண்டும். அது மட்டுமின்றி, அந்தமான் நிகோபார் தீவுகள், ஜம்மு - காஷ்மீர், உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்வதென்றால், சிறப்பு அனுமதியும் பெற வேண்டும்.
விசா காலம் முடிந்த பின்னும், இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கண்காணிக்கும் வகையில், ஹோட்டல்கள், பல்கலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவை, வெளிநாட்டினர் குறித்த விபரங்களை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். விமானம் மற்றும் கப்பல்களில் வெளிநாட்டினர் வரும் தகவல்களை, சம்பந்தப்பட்ட விமான நிறுவனமும், கப்பல் நிறுவனமும் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டினரின் வருகையை ஒழுங்குபடுத்தவும், தேவையெனில், அவர்களுக்கு கட்டுப்பாடுவிதிக்கவும், இந்த புதிய சட்டமானது அதிகாரம் வழங்குகிறது. மொத்தத்தில் வெளிநாட்டினர் வருகை மற்றும் குடியுரிமை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் இதன் வாயிலாக கையாள முடியும். அத்துடன், நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவது போன்றவற்றை கருத்தில் கொண்டும், இந்த சட்ட மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுவோரை தடுப்பதற்காக, குடியேற்றம் தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்கும் பணியில், உலகில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராகவே, பல நாடுகளில் சமூக, அரசியல் சூழ்நிலைகளும் உள்ளன. அந்த வரிசையில் தான், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும், இந்த புதிய சட்ட மசோதாவை உருவாக்கியுள்ளது. இந்த மசோதா இன்னும் பார்லிமென்டில் நிறைவேற்றப்படவில்லை. நிறைவேறினால், அதிலுள்ள கடுமையான விதிமுறைகளும், தண்டனைகளும் அமலுக்கு வரும்.
வெளிநாட்டினர் எவரும், நம்நாட்டில் தடையின்றி, அனுமதியின்றி தங்கியிருக்க, நம் அரசியல் சட்டம் உரிமை அளிக்கவில்லை. அதை மேலும் உறுதி செய்யும் வகையில், தேசத்தின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்த வெளிநாட்டவரும், இந்திய மண்ணில் நுழையவோ, தங்கியிருக்கோ, இனி அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அதே நேரத்தில், இந்த சட்ட மசோதாவில் உள்ள சில விதிமுறைகள் மிகவும் கடுமையாக இருப்பதாகவும், அதிகாரிகளால் தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் உள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
அத்துடன், இந்த சட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு இல்லை என்ற புகாரும் கூறப்படுகிறது. எனவே, வெளிநாட்டவர்களுக்கு எதிராக, இந்தச் சட்டத்தை பயன்படுத்தும் விஷயத்தில், மத்திய அரசு எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். இல்லையெனில், உலக அரங்கில், நம் நாட்டின் கவுரவத்திற்கு பாதிப்பு ஏற்படும்.