Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பார்லிமென்டை விட அரசியல் சாசனமே உயர்ந்தது: பி.ஆர்.கவாய்

பார்லிமென்டை விட அரசியல் சாசனமே உயர்ந்தது: பி.ஆர்.கவாய்

பார்லிமென்டை விட அரசியல் சாசனமே உயர்ந்தது: பி.ஆர்.கவாய்

பார்லிமென்டை விட அரசியல் சாசனமே உயர்ந்தது: பி.ஆர்.கவாய்

ADDED : ஜூன் 27, 2025 01:14 AM


Google News
Latest Tamil News
அமராவதி: “அரசியலமைப்பே நாட்டின் உச்சபட்சம்; பார்லிமென்ட் உள்ளிட்ட பிற ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் அதன் கீழ் இயங்கும் பிரிவுகள்,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.

நாட்டின், 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் கடந்த மாதம் பொறுப்பேற்றார். அவரது சொந்த ஊரான மஹாராஷ்டிராவின் அமராவதியில் நடந்த பாராட்டு விழாவில் அவர் பேசியதாவது:

இந்திய அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது. ஜனநாயகத்தின் மூன்று துாண்களும் அதன் கீழ்தான் செயல்படுகின்றன. அரசியலமைப்பை திருத்துவதற்கு தான் பார்லிமென்டுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், நம் அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது.

ஒருசிலர் பார்லிமென்ட் தான் உயர்ந்தது என சொல்கின்றனர். என்னைப் பொறுத்தவரை அரசியலமைப்பே முதன்மையானது.

நிர்வாகம், சட்டசபை அல்லது நீதித் துறை ஆகிய ஜனநாயக அமைப்புகளில் எந்த அமைப்பு உயர்ந்தது என்ற விவாதம் எப்போதுமே இருந்து வருகிறது.

அரசுக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பிப்பதால் மட்டுமே ஒரு நீதிபதி சுதந்திரமானவர் ஆகிவிட முடியாது. ஒரு நீதிபதிக்கு எப்போதும் ஒரு கடமையுணர்வு இருக்க வேண்டும். அவர் பொதுமக்களின் உரிமைகள், அரசியலமைப்பு விவகாரம் மற்றும் கோட்பாடுகளின் பாதுகாவலர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நமக்கு அதிகாரம் மட்டுமல்ல, ஒரு கடமையும் உள்ளது என்பதை நீதிபதிகள் நினைவில் கொள்ள வேண்டும். தன் தீர்ப்பு குறித்து மக்கள் என்ன நினைப்பர் என்பதை கருதி ஒரு நீதிபதி செயல்படக்கூடாது.

நாம் சுதந்திரமாக சிந்திக்க வேண்டும். மக்கள் என்ன சொல்வர் என்பது நம் முடிவெடுக்கும் முறையின் ஒரு பகுதியாக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. நான் தனிப்பட்ட முறையில், அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகளை எப்போதும் நிலை நிறுத்தியுள்ளேன்.

என் தீர்ப்புகள் மற்றும் பணிகள் இதையே காட்டும். நான் ஒரு கட்டட கலைஞர் ஆக விரும்பினேன். ஆனால், என்னை வழக்கறிஞராக பார்க்க என் தந்தை ஆசைப்பட்டார். ஏனென்றால், அவருக்கு வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று கைதானதால், அது முடியாமல் போனது.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us