கால்நடை திருடர்களை விரட்டி சென்ற மாணவர் சுட்டுக்கொலை
கால்நடை திருடர்களை விரட்டி சென்ற மாணவர் சுட்டுக்கொலை
கால்நடை திருடர்களை விரட்டி சென்ற மாணவர் சுட்டுக்கொலை
ADDED : செப் 17, 2025 12:42 AM
கோரக்பூர் :உத்தர பிரதேசத்தில், கால்நடைகளை திருட வந்தவர்களை விரட்டிச் சென்ற, 'நீட்' பயிற்சி மாணவர், திருடர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உ.பி.,யின் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் குப்தா, 19. இவர் பள்ளி படிப்பை முடித்துவிட்டு, எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' நுழைவு தேர்வு வகுப்புக்கு சென்று வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் கால்நடை திருடும் கும்பல் தீபக் குப்தாவின் கிராமத்திற்கு மூன்று வாகனங்களில் வந்தனர். இது குறித்து கிராமத்தினருக்கு தகவல் தந்த தீபக், ஆட்கள் வருவதற்கு முன், தனி ஆளாக திருடர்களை விரட்டி பிடிக்க முயன்றார்.
ஆனால், திருடர்கள் தீபக்கை பிடித்து, தங்கள் லாரியில் ஏற்றிக் கொண்டு சென்றனர். ஓடும் லாரியில் இளைஞர் வாயில் துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது.
அதன் பின், உடலை கிராமத்தில் இருந்து நான்கு கி.மீ.,க்கு அப்பால் சாலை ஓரம் வீசி, தலை மீது லாரி சக்கரத்தை ஏற்றி சிதைத்துவிட்டு சென்றுள்ளனர்.
இதை பார்த்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் கொலையாளிகளை தீவிரமாக தேடினர். அவர்களிடம் ஒருவர் மட்டும் சிக்கிக் கொண்டார்.
அந்த நபரை கடுமையாக தாக்கி கட்டிப்போட்டவர்கள், எஞ்சிய நபர்களை உடனடியாக பிடிக்க வலியுறுத்தி, கோரக்பூர் - பிப்ரைச் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால், கோரக்பூரில் பதற்றம் நிலவுகிறது.