பிரபல தாதா காலா ஜாதேதியிடம் திஹார் சிறையில் விந்தணு எடுப்பு
பிரபல தாதா காலா ஜாதேதியிடம் திஹார் சிறையில் விந்தணு எடுப்பு
பிரபல தாதா காலா ஜாதேதியிடம் திஹார் சிறையில் விந்தணு எடுப்பு
ADDED : ஜூன் 17, 2025 08:30 PM
புதுடில்லி:சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல தாதா காலா ஜாதேதி, தனக்கு குழந்தை வேண்டும் என்பதால், பரோலில் விட அனுமதி கேட்டிருந்தார். பரோலில் செல்ல அனுமதி மறுத்துள்ள டில்லி கோர்ட், அவரின் மனைவிக்கு செயற்கை கரு உருவாக்க வசதியாக, தாதாவின் விந்தணுக்களை எடுத்து கொடுக்க உத்தரவிட்டார். அதன்படி, அவரிடம் இருந்து விந்தணு எடுக்கப்பட்டது.
பிரபல தாதா சந்தீப் என்ற காலா ஜாதேதி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கும் அனுராதா சவுத்ரி என்ற பெண்ணுக்கும், திஹார் சிறையில் இருந்த போது திருமணமானது.
குழந்தை பெற்று, தங்கள் குடும்பத்தை விருத்தி செய்து கொள்ள விரும்பிய தாதா காலா ஜாதேதி, தன்னை பரோலில் விட, அனுமதி கோரியிருந்தார்.
அதை மறுத்துள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தீபக் வால்சன், தாதாவுக்கு திஹார் சிறையிலேயே, கடந்த 14ம் தேதி விந்தணுவை எடுத்து, செயற்கை கரு உருவாக்கத்திற்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் மனைவி அனுராதாவிடம், ஒரு மணி நேரத்தில் வழங்க உத்தரவிட்டார்.
இது தொடர்பான உத்தரவில் அவர் கூறியதாவது:
ஜூன் மாதம், 14ம் தேதி காலை 6:00 - 7:00 மணிக்குள் தாதாவிடம் இருந்து விந்தணுக்களை எடுக்க வேண்டும். அதுதொடர்பாக, சிறை கைதியின் தனிப்பட்ட அடையாளம் வெளியே தெரியக் கூடாது. அவரிடம் இருந்து விந்தணு எடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில், அவர் மனைவி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு அதை கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் சிறை கண்காணிப்பாளர் மற்றும் விசாரணை அதிகாரி, மருத்துவ நடைமுறைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.
அதன் படி, கடந்த 14ம் தேதியே, அந்த தாதாவிடம் இருந்து அவரின் விந்தணு எடுக்கப்பட்டு விட்டது.