Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பெரிய கட்சிகளுடன் கூட்டணியில் உள்ள சிறு கட்சிகள் சமயோசிதம்...

பெரிய கட்சிகளுடன் கூட்டணியில் உள்ள சிறு கட்சிகள் சமயோசிதம்...

பெரிய கட்சிகளுடன் கூட்டணியில் உள்ள சிறு கட்சிகள் சமயோசிதம்...

பெரிய கட்சிகளுடன் கூட்டணியில் உள்ள சிறு கட்சிகள் சமயோசிதம்...

ADDED : செப் 22, 2025 11:48 PM


Google News
Latest Tamil News
தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள், தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை தக்க வைத்துக்கொள்ள, தங்களது சொந்த சின்னத்திலேயே போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பெரிய கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்டதால், தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை இழந்து நிற்கும் கட்சிகளை பார்த்து, இவை உஷாரடைந்துள்ளன.

அங்கீகாரம் பெறாத 295 கட்சிகள்


தமிழகத்தில், தி.மு.க. - அ.தி.மு.க. - பா.ஜ. - காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூ. - இந்திய கம்யூ. - தே.மு.தி.க. - ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், தேசியவாத காங்கிரஸ் ஆகிய, 12 கட்சிகள், தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தவிர, தேர்தல் கமிஷனில் பதிவு செய்து அங்கீகாரம் பெறாத, 295 கட்சிகள் உள்ளன. இக்கட்சிகள், தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிட்ட சதவீத ஓட்டுக்களை பெறும் போது தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்படும். மாநில கட்சியாக அங்கீகாரம் பெற, 4 விதிமுறைகளை தேர்தல் கமிஷன் வகுத்துள்ளது.

அதன்படி, சட்டசபை தேர்தலில் மொத்த தொகுதிகளில், 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். லோக்சபா தேர்தலில், மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் ஒரு இடத்திலாவது வெற்றி பெற வேண்டும். லோக்சபா அல்லது சட்டசபை தேர்தலில், 6 சதவீத ஓட்டுக்களுடன், ஒரு லோக்சபா அல்லது இரண்டு சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

எந்த தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டால், 8 சதவீத ஓட்டுக்களையாவது அக்கட்சி பெற்றிருக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒரு விதிமுறையை பூர்த்தி செய்யும்பட்சத்தில், அந்த கட்சிக்கு, மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கும். இந்த விதிகளின்படி நடப்பாண்டு விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

475 கட்சிகளின் பதிவு ரத்து




இந்நிலையில், நாடு முழுதும் 6 தேர்தல்களில் தனி சின்னத்தில் போட்டியிடாத, தேர்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாத, 475 கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் சமீபத்தில் ரத்து செய்தது.

அதன்படி, தமிழகத்தில் கொ.ம.தே.க. - ம.ம.க. உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் கமிஷனின் பதிவை இழந்துள்ளன. இப்பட்டியலில் உள்ள சில கட்சிகள், முந்தைய தேர்தல்களில், அ.தி.மு.க. - தி.மு.க. கூட்டணிகளில் சேர்ந்து போட்டியிட்டுள்ளன. ஆனால், தனி சின்னத்தில் போட்டியிடாமல், கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சிகளின் சின்னத்திலேயே போட்டியிட்டன.

இதனால், தேர்தல் கமிஷனின் பதிவு ரத்தாகியுள்ளது. இதன்விளைவாக, பெரிய கட்சிகளுடன் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள், சின்னமே இல்லாமல் அங்கீகாரம் ரத்தான கட்சிகளை கண்டு தற்போது உஷார் அடைந்துள்ளன.

தமிழகத்தில், அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், பெரிய கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடாமல், தனி சின்னம் பெற்று போட்டியிட்டு, கட்சியை காப்பாற்றும் முடிவுக்கு வந்துள்ளன.

இது, கூட்டணியிலுள்ள சிறிய கட்சிகளை, தங்கள் சின்னத்தில் போட்டியிட வைத்து, தங்களது வெற்றி கணக்கை உயர்த்தி காட்டும் தி.மு.க. - அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளுக்கு நெருடலை தரக்கூடும்.

அதேநேரத்தில், தனி சின்னத்தில் போட்டியிட சிறிய கட்சிகளை அனுமதித்தால், அவற்றின் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்பதால், பெரிய கட்சிகள் கவலை அடைந்துள்ளன.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us