'நாக்பூர் கலவரத்தில் வங்கதேசத்திற்கு தொடர்பு': சிவசேனா மூத்த தலைவர் புகார்
'நாக்பூர் கலவரத்தில் வங்கதேசத்திற்கு தொடர்பு': சிவசேனா மூத்த தலைவர் புகார்
'நாக்பூர் கலவரத்தில் வங்கதேசத்திற்கு தொடர்பு': சிவசேனா மூத்த தலைவர் புகார்
ADDED : மார் 24, 2025 02:59 AM

மும்பை, மார்ச் 24-
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இங்கு, மராட்டிய மன்னர் சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கை தொடர்பான சாவா என்ற ஹிந்தி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில், சத்ரபதி சம்பாஜியை மதம் மாற்றம் செய்ய முகலாய மன்னர் அவுரங்கசீப் முயன்று, கொடூரமாக கொலை செய்தது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இதைத் தொடர்ந்து, சத்ரபதி சம்பாஜி மாவட்டத்தில் உள்ள அவுரங்கசீபின் கல்லறையை அகற்றக்கோரி விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் நாக்பூரில் கடந்த 17ம் தேதி போராட்டம் நடத்தின.
அப்போது முஸ்லிம்களின் புனித நுால் அவமதிக்கப்பட்டதாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து, கல்வீசி தாக்குவது, வாகனங்களுக்கு தீ வைப்பது போன்ற சம்பவங்களில் முஸ்லிம் தரப்பினர் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் நிரூபம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாக்பூரில், திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு பின்னணியில் நம் அண்டை நாடான வங்கதேசத்தில் உள்ளவர்களின் தொடர்பு இருப்பதாக தெரிகிறது.
இது குறித்து விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். இந்த கலவரம் தொடர்பாக கைதான நபர்களில் ஒருவர், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான முஜாஹிதீன் அமைப்பிற்கு நிதியளிக்க, சமூக ஊடகங்களை பயன்படுத்தி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.