துப்பாக்கி முனையில் ரூ.1 கோடி நகைகள் வழிப்பறி
துப்பாக்கி முனையில் ரூ.1 கோடி நகைகள் வழிப்பறி
துப்பாக்கி முனையில் ரூ.1 கோடி நகைகள் வழிப்பறி
ADDED : செப் 26, 2025 01:34 AM
பிரகதி மைதான்: பாரத் மண்டபம் அருகே 1 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை துப்பாக்கி முனையில் இருவர் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சாந்தினி சவுக் பகுதியில் இருந்து, பாரத் மண்டபம் அருகே உள்ள பைரோன் மந்திர் நோக்கி சிவம் குமார் யாதவ், 28, ராகவ், 55, ஆகிய இருவரும் ஸ்கூட்டரில் நேற்று முன்தினம் மதியம் சென்று கொண்டிருந்தனர்.
மந்திர் அருகே ஸ்கூட்டரை நிறுத்தும் இடத்தின் அருகே அவர்கள் வந்தபோது, பைக்கில் வந்த இருவர் வழிமறித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய அவர்கள், சிவம் குமார் யாதவிடம் இருந்து நகைகள் இருந்த இரு பைகளை பறித்து தப்பிச் சென்றனர்.
ஒரு பையில் 500 கிராம் தங்க நகைகளும் மற்றொரு பையில் 35 கிலோ வெள்ளி நகைகளும் இருந்தன. இதுகுறித்து திலக் மார்க் போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுற்றுப்புறப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, கொள்ளையர்களை அடையாளம் கண்டுள்ளனர்.
கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.