ஏ.ஐ., உருவாக்கிய பதிவால் கலவரம்: குஜராத்தில் 50 பேர் அதிரடி கைது
ஏ.ஐ., உருவாக்கிய பதிவால் கலவரம்: குஜராத்தில் 50 பேர் அதிரடி கைது
ஏ.ஐ., உருவாக்கிய பதிவால் கலவரம்: குஜராத்தில் 50 பேர் அதிரடி கைது
ADDED : செப் 21, 2025 01:26 AM

வதோதரா: குஜராத்தில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பதிவால், ஹிந்து - முஸ்லிம் சமூகத்தினரிடையே மோதல் வெடித்தது. இது தொடர்பாக, 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர பாய் படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வதோதரா மாவட்டத்தில் உள்ள ஜூனிகர்ஹி என்ற பகுதியில் வசிக்கும் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.
அதில், முஸ்லிம்களின் மத வழிபாட்டு தலமான மசூதி பற்றிய தகவல்கள் இருந்தன. இது ஆட்சேபனைக்குரிய வகையில் இருப்பதாகக் கூறி, ஜூனிகர்ஹி பகுதியில் முஸ்லிம்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை கண்டித்து, ஹிந்துக்களும் போராட்டத்தில் குதித்தனர்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். மேலும், அப்பகுதியில் இருந்த வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், நிலைமையை கட்டுப்படுத்தினர்.
இது தொடர்பாக, 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், ஜூனிகர்ஹி பகுதியில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.