பார்லி., சிறப்பு கூட்டத்துக்கான கோரிக்கை நிராகரிப்பு! ஜூலையில் அறிக்கை தாக்கல் செய்ய அரசு முடிவு
பார்லி., சிறப்பு கூட்டத்துக்கான கோரிக்கை நிராகரிப்பு! ஜூலையில் அறிக்கை தாக்கல் செய்ய அரசு முடிவு
பார்லி., சிறப்பு கூட்டத்துக்கான கோரிக்கை நிராகரிப்பு! ஜூலையில் அறிக்கை தாக்கல் செய்ய அரசு முடிவு
ADDED : ஜூன் 04, 2025 03:46 AM

'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து விவாதிக்க பார்லி., சிறப்பு கூட்டத்தை இந்த மாதமே கூட்டும்படி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அது முடியாத காரியம் என, மத்திய அரசு தரப்பு தெரிவித்துள்ளது. ஜூலையில் துவங்கும் மழைக்கால கூட்டத்தொடரில், அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை, நம் ராணுவம் மே 7ல் அழித்தது. இதையடுத்து, இந்தியா - பாக்., இடையே நான்கு நாட்கள் நீடித்த மோதல், பாக்., கெஞ்சியதை அடுத்து முடிவுக்கு வந்தது.
போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே, இந்தியா - பாக்., நாடுகள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். மேலும், தன்னால் தான் போர் நிறுத்தம் ஏற்பட்டதாகவும் அவர் தம்பட்டம் அடித்தார். இதை திட்டவட்டமாக மறுத்த மத்திய அரசு, பாக்., மன்றாடியதாலேயே போர் நிறுத்தம் அமலானதாக தெரிவித்தது.
குழப்பம்
டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்பு குறித்து, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து விவாதிக்க பார்லி., சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சிங்கப்பூரில், தனியார் டிவி சேனலுக்கு முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் கடந்த வாரம் அளித்த பேட்டி, தேசிய அரசியலில் மீண்டும் புயலை கிளப்பி உள்ளது.
'ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, எத்தனை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பது முக்கியமல்ல; எப்படி வீழ்த்தப்பட்டன என்பதே முக்கியம்' என, அவர் கூறினார்.
நம் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது இந்த கருத்து குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து விவாதிக்க பார்லி., சிறப்பு கூட்டத்தை கூட்டும்படி, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று கூறியதாவது:
ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கை எதற்காக நடந்தது; எப்படி நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இது தொடர்பாக இருமுறை அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, மத்திய அரசு விளக்கம் அளித்தது. தற்போது, பார்லி., சிறப்பு கூட்டத்தை கூட்டும்படி எதிர்க்கட்சிகள் கோருவது, நியாயம் இல்லை.
உண்மை இல்லை
காரணம், வழக்கமான அடுத்த கூட்டத்தொடர் மிக நெருக்கத்தில் வந்துவிட்டது. ஜூலையில், பார்லி., மழைக்காலக் கூட்டத்தொடர் நடக்கவுள்ளது. இதற்கு சில வாரங்களே உள்ள நிலையில், சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுவது முடியாத காரியம்; தேவையற்றது.
மழைக்கால கூட்டத்தொடரில், ஆப்பரேஷன் சிந்துார் குறித்து விவாதம் நடத்தப்படும். இதற்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளிப்பார். இதுதவிர, 'எமர்ஜென்சி' அமலாகி, 50 ஆண்டுகளாவதை முன்னிட்டு, வரும் 25 மற்றும் 26 தேதிகளில் சிறப்பு கூட்டம் நடக்கவுள்ளதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.