லோக்சபாவில் செங்கோலை அகற்ற வேண்டும்: சமாஜ்வாதி எம்.பி., வலியுறுத்தல்
லோக்சபாவில் செங்கோலை அகற்ற வேண்டும்: சமாஜ்வாதி எம்.பி., வலியுறுத்தல்
லோக்சபாவில் செங்கோலை அகற்ற வேண்டும்: சமாஜ்வாதி எம்.பி., வலியுறுத்தல்
ADDED : ஜூன் 27, 2024 10:47 AM

புதுடில்லி: ''லோக்சபாவில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். அதற்கு பதிலாக அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும்'' என சமாஜ்வாதி எம்.பி., ஆர்.கே.சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.
புதிய பார்லிமென்ட் கட்டடத்தை கடந்தாண்டு மே 28ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அன்றைய தினம், 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட செங்கோலை லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார் பிரதமர் மோடி. அப்போது, ''நேர்மை, நீதிக்கு ஒரு அடையாளமாக செங்கோல் திகழ்ந்தது; செங்கோல் என்பது ஒரு அதிகார மாற்றத்தின் அடையாளம்'' என பிரதமர் மோடி பேசியிருந்தார்.
தற்போது 18வது லோக்சபா தேர்தல் முடிந்து பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்றுள்ளார். நேற்று (ஜூன் 26) நடந்த சபாநாயகர் தேர்தலில் 2வது முறையாக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். சமாஜ்வாதி கட்சி எம்.பி., ஆர்.கே.சவுத்ரி, லோக்சபாவில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் கூறியதாவது: சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். பார்லிமென்ட் என்பது ஜனநாயகத்தின் கோவில்; அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழ்வது செங்கோல். செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும். இவ்வாறு ஆர்.கே.சவுத்ரி கூறினார். அவரது கருத்தில் எந்த தவறும் இல்லை எனக் கூறியுள்ள காங்கிரஸ், செங்கோலை அகற்றுவது தொடர்பான சவுத்ரியின் கருத்தை ஆதரித்துள்ளது.
கோரிக்கை நிராகரிப்பு
செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாதி எம்.பி., சவுத்ரி விடுத்த கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தார்.