ஓட்டு திருட்டில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு: 'ஹைட்ரஜன்' குண்டு வெடிக்கும் என்கிறார் ராகுல்
ஓட்டு திருட்டில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு: 'ஹைட்ரஜன்' குண்டு வெடிக்கும் என்கிறார் ராகுல்
ஓட்டு திருட்டில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு: 'ஹைட்ரஜன்' குண்டு வெடிக்கும் என்கிறார் ராகுல்
ADDED : செப் 21, 2025 01:12 AM

வயநாடு: ''பிரதமர் நரேந்திர மோடி 2024 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற, ஓட்டு திருட்டில் ஈடுபட்டார். அது தொடர்பான, 'ஹைட்ரஜன்' வெடிகுண்டை விரைவில் வெடிக்க வைப்போம்,'' என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 2023ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, ஆலந்த் தொகுதியில் 6,018 வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயற்சி நடந்ததாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சமீபத்தில் குற்றஞ்சாட்டினார்.
18 கடிதங்கள் இதற்காக, 'ஆன்லைன்' மூலம் பிரத்யேக செயலி பயன்படுத்தப்பட்டதாகவும், வாக்காளர் பட்டியலில் இருந்து உறவினரின் பெயரை சிலர் நீக்க முயற்சித்ததை ஓட்டுச்சாவடி அளவிலான அதிகாரி ஒருவர் தற்செயலாக கண்டறிந்தபோது, இந்த மோசடி தெரியவந்ததாகவும் ராகுல் கூறியிருந்தார்.
பெயர் நீக்கத்திற்கான விண்ணப்பங்கள் எங்கிருந்து சமர்ப்பிக்கப்பட்டன என்பதற்கான இணையதள ஐ.பி., முகவரி மற்றும் ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை கடவுச்சொல் பதிவு விபரங்களை தருமாறு, தேர்தல் கமிஷனுக்கு 18 மாதங்களில் 18 கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
ஆனால், இதுவரை தேர்தல் கமிஷன் அதனை வழங்கவில்லை என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
அதே நேரம், ராகுலின் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் மறுத்திருந்தது. ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை யாராலும் நீக்க முடியாது என தெரிவித்தது.
வாக்காளர் பெயரை நீக்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்டவருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில், வயநாட்டில் நேற்று செய்தியாளர்களிடம் ராகுல் கூறியதாவது:
ஓட்டு திருட்டு குறித்து ஒரு ஹைட்ரஜன் வெடிகுண்டு விரைவில் வெடிக்கும். அப்படி நடந்ததா என யாருமே சந்தேகப்பட்டிருக்க மாட்டார்கள்.
யதார்த்த நிலவரத்தை அப்படியே அழித்து விடும் அளவுக்கு அந்த உண்மை இருக்கும். ஆதாரங்கள் இல்லாமல் எதையும் சொல்வதில்லை.
நடந்தவை குறித்து 100 சதவீத ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. விரைவில் அவற்றை வெளியிடுவோம்.
பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதி பற்றியது தான் இந்த ஹைட்ரஜன் வெடிகுண்டா என்ற கேள்விக்கான விடையை, ஊடகங்களின் கணிப்புகளுக்கே விட்டு விடுகிறேன். என் வேலையை நான் செய்கிறேன்.
முறைகேடு கர்நாடகாவில் காங்கிரஸ் செல்வாக்கு பெற்ற ஓட்டுச்சாவடிகளில் இருந்து அதிக அளவில் வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயற்சி நடந்தது. மகாதேவபுரா, ஆலந்த் உள்ளிட்ட தொகுதிகளில் நடந்தது பற்றி நாங்கள் காண்பித்தோம்.
ஆலந்த் தொகுதியில் வாக்காளர் பெயர்களை நீக்க உதவிய போன் நம்பர்களை பகிருமாறு, தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரிடம், மாநில சி.ஐ.டி., கேட்டிருந்தது.
ஆனால், இதுவரை அவர் வழங்கவில்லை. இந்த முறைகேடு குறித்து கர்நாடக சி.ஐ.டி., தீவிரமாக விசாரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.