பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., மரணம்
பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., மரணம்
பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., மரணம்
ADDED : ஜூன் 27, 2025 08:48 PM

அமிர்தசரஸ்:பஞ்சாப் மாநிலம், தரன்தரன் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., டாக்டர் கஷ்மீர் சிங் சோஹல், 66, நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டாக்டர் கஷ்மீர் சிங் சோஹல், கண் மருத்துவ நிபுணராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின், 2020ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். கடந்த, 2022ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், தரன் தரன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர், மூன்று ஆண்டுகளாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அமிர்தசரஸ் தனியார் மருத்துவமனையில் நேற்று மரணம் அடைந்தார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, முதல்வர் பகவந்த் மான், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சோஹல் கடின உழைப்பாளி மற்றும் அர்ப்பணிப்புள்ள அரசியல் தலைவர். அவரது ஆன்மாவுக்கு அமைதி அடைய இறைவனை வேண்டுகிறேன். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு மன தைரியத்தையும் இறைவன் வழங்கட்டும்,” என, கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, டில்லி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி சிங் உட்பட ஏராளமானோர், சோஹல் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த சோஹலுக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இருவருமே டாக்டர்கள்.