பிரதமரின் கதி சக்தி திட்டம்: சர்வதேச முதலீட்டு நிறுவனம் பாராட்டு
பிரதமரின் கதி சக்தி திட்டம்: சர்வதேச முதலீட்டு நிறுவனம் பாராட்டு
பிரதமரின் கதி சக்தி திட்டம்: சர்வதேச முதலீட்டு நிறுவனம் பாராட்டு
UPDATED : ஜூன் 30, 2024 03:39 PM
ADDED : ஜூன் 29, 2024 03:44 PM

புதுடில்லி: பிரதமர் மோடி அறிவித்த கதி சக்தி திட்டமானது, இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும், நெடுஞ்சாலை, ரயில்வே மற்றும் துறைமுகங்களுக்கு ஊக்கமளித்ததுடன், பொருளாதார வளர்ச்சியை தூண்டி உள்ளதாக, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச முதலீட்டு வங்கி மற்றும் நிதி நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி கூறியுள்ளது.
நாடு முழுதும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் புதிய வேகம் மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து செயல்படுத்தும், 'பி.எம்.கதிசக்தி தேசிய மாஸ்டர் பிளான்'திட்டத்தை 2021ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்தியா முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, கடந்த 2021-ம் ஆண்டு கதி சக்தி திட்டத்தை பிரதமர் மோடி துவங்கினார். இந்த திட்டத்தின்படி, ரயில்வே, சாலை, துறைமுகங்கள்உள்ளிட்ட 16 அமைச்சகங்கள் ஒன்றிணைக்கப்பட்டு உள்ளன. கதி சக்தி திட்டத்தின் கீழ்மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படுகிறன.
இந்த திட்டம் தொடர்பாக மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் உள்கட்டமைப்பு முதலீடானது, 2024 நிதியாண்டில் ஜிடிபி.,யில் 5.3 சதவீதமாக இருந்தது. இது 2029 நிதியாண்டில் ஜிடிபி.,யில் 6.5 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கிறோம்.
கதி சக்தி திட்டமானது, இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும், நெடுஞ்சாலை, ரயில்வே மற்றும் துறைமுகங்களுக்கு ஊக்கமளித்ததுடன், பொருளாதார வளர்ச்சியை தூண்டி உள்ளது. கடந்த தசாப்தத்தில் உள்கட்டமைப்பு துறையை வலுவாக விரிவுபடுத்தியது. அதிக முதலீட்டுடன் சிறந்த இலக்கு மற்றும் அதிக உற்பத்தியையும் கொண்டு உள்ளது.
கதி சக்தி திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட திட்டங்கள் நல்ல பலன்கள் அளிக்க துவங்கி உள்ளன. இந்த திட்டத்தின் கீழ், துறைமுகம் மற்றும் கப்பல் துறைகளில் ரூ.60,900 கோடி மதிப்பிலான 101 பணிகள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன. அதில், ரூ.8,900 கோடி மதிப்பு 26 திட்டங்கள் முடிவடைந்து உள்ளன. ரூ.15,340 கோடி மதிப்பு 42 திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. ரூ. 36,640 கோடி மதிப்பிலான 33 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
கதிசக்தி திட்டத்தின் கீழ் இந்தியாவில்,சாகர்மாலா (நீர்வழித்தடம்) திட்டத்தில், ரூ.1.12 லட்சம் கோடி மதிப்பிலான 220 திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளன. ரூ.2.21 லட்சம் கோடி மதிப்பிலான 231 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.2.07 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு திட்டங்கள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்தியாவின் உள்கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. உள்கட்டமைப்பு மேம்பாட்டில் சீனாவை இந்தியா முந்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.