Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ சுப்ரீம் கோர்ட்டிற்கு ஜனாதிபதி 14 கேள்விகள்

சுப்ரீம் கோர்ட்டிற்கு ஜனாதிபதி 14 கேள்விகள்

சுப்ரீம் கோர்ட்டிற்கு ஜனாதிபதி 14 கேள்விகள்

சுப்ரீம் கோர்ட்டிற்கு ஜனாதிபதி 14 கேள்விகள்

UPDATED : மே 16, 2025 12:11 PMADDED : மே 15, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி:'மசோதாவுக்கு ஒப்புதல் கொடுப்பதா வேண்டாமா என்று முடிவு எடுக்க கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அரசியல் சாசனம் அதிகாரம் அளித்துள்ளதா?' என, ஜனாதிபதி திரவுபதி முர்மு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக 14 கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தை ஜனாதிபதி கேட்டுள்ளார்.

மத்திய அரசுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்குமான பலப்பரீட்சையாக இந்த நிகழ்வு கவனிக்கப்படுகிறது. இந்த பிரச்னை தொடங்கியது தமிழகத்தில் தான். சட்டசபையில் திமுக அரசு நிறைவேற்றி அனுப்பிய பல மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் தராமலும், திருப்பி அனுப்பாமலும் வைத்திருந்தார்.

வேண்டும் என்றே கவர்னர் இழுத்தடிப்பதாக, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. நீதிபதிகள், ஜே.பி. பர்த்திவாலா, மகாதேவன் அமர்வு, ஏப்ரல் 8ம் தேதி விசாரித்தது.

காலக்கெடு


மாநில அரசுகள் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று கவர்னர்களுக்கும் ஜனாதிபதிக்கும் நீதிபதிகள் காலக்கெடு நிர்ணயித்தனர். தன்னால் முடிவு எடுக்க முடியாத மசோதாக்களை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைப்பது வழக்கம்.

எனவே, ஜனாதிபதியும் இந்த விவகாரத்தில் இழுக்கப்பட்டார். இதுவரை ஜனாதிபதி, கவர்னர் அதிகாரங்களில் கோர்ட் தலையிட்டு அதிகார வரம்பை நிர்ணயம் செய்தது இல்லை என்பதால், காலக்கெடு தீர்ப்பு பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. மேலும் ஒரு படி சென்ற நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டுக்கு அரசியல் சாசனத்தின் 142வது பிரிவு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழக கவர்னர் மற்றும் ஜனாதிபதியிடம் கிடப்பில் இருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதாக அறிவித்தது. இவ்வாறு நடப்பது இதுவே முதல் முறை என்பதால், நாடு முழுதும் அரசியல் அதிர்வை உண்டாக்கியது.

மத்திய அரசும் ஜனாதிபதியும் கவர்னர் ரவியும் இது குறித்து கருத்து வெளியிடாமல் மவுனம் காத்தனர். துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் மட்டும், சுப்ரீம் கோர்ட்டை கடுமையாக விமர்சித்தார். ஜனாதிபதிக்கும் கவர்னருக்கும் கோர்ட் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? சட்டம் இயற்றும் வேலையை கோர்ட் எப்படி தன் கையில் எடுத்துக் கொள்ள முடியும்? என்று அவர் கொந்தளித்தார்.

எனினும், அந்த தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும்; அவ்வாறு செய்தால், இதே நீதிபதிகள் விசாரித்து, முடிவு சொல்வார்கள்; அல்லது கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பி வைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி நடக்கவில்லை.

எதிர்பார்ப்பு


மாறாக, அரசியல் சாசனத்தின், 143 (1) பிரிவின் கீழ் உள்ள சிறப்பு அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்தி, கோர்ட்டிடம் சில விளக்கங்களை கேட்டுள்ளார். சட்டம் சம்பந்தப்பட்ட சந்தேகத்தை ஜனாதிபதி கேட்பதற்கும், அதற்கு சுப்ரீம் கோர்ட் விளக்கம் அல்லது பதில் அளிப்பதற்கும் இந்த சட்டப்பிரிவு இடமளிக்கிறது. அதன்படி, கவர்னருக்கும் ஜனாதிபதிக்கும் காலக்கெடு விதித்தது தொடர்பாக, 14 கேள்விகளை முர்மு கேட்டுள்ளார்.

ஜனாதிபதியின் கேள்விகள் தொடர்பாக விவாதிக்க, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதே சமயம், ஜனாதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுப்பதற்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கு உரிமை உள்ளது என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள்


1) ஒரு மசோதா கவர்னரிடம் சமர்ப்பிக்கப்படும் போது, அரசியல் சாசனத்தின் 200வது பிரிவின் கீழ் அவருக்கு உள்ள சட்ட ரீதியான வாய்ப்புகள் என்ன?

2) அந்த வாய்ப்புகளை பயன்படுத்த, அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா?

3) இந்த பிரிவின்கீழ், கவர்னருக்கு உள்ள சட்ட ரீதியான தனி உரிமை என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதா?

4) அதன்படி கவர்னர் எடுக்கும் முடிவுகளை ஆய்வு செய்வதற்கு, 361வது பிரிவு தடை விதிக்கிறதா?

5) அரசியல் சாசனம் கவர்னரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்காத நிலையில் கோர்ட் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?

6) 201வது பிரிவின்படி, மசோதா மீது முடிவு எடுக்க ஜனாதிபதிக்கு உள்ள தனி உரிமைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதா?

7) அரசியல் சாசனத்தில் ஜனாதிபதியின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில், கோர்ட் அவ்வாறு நிர்ணயிக்க முடியுமா?

8) கவர்னர் ஒரு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்போது, தனக்குள்ள அதிகாரம் குறித்து, சுப்ரீம் கோர்ட்டிடம் ஜனாதிபதி ஆலோசனை பெற வேண்டுமா?

9) பிரிவு 200ன் கீழ் கவர்னரும், 201ன் கீழ் ஜனாதிபதியும் முடிவு எடுப்பதற்கு முன்பாக, மசோதா சட்டமாகுமா? சட்டமாகாத மசோதாவில் உள்ளது பற்றி கோர்ட் விசாரிக்க முடியுமா?

10) கவர்னர் அல்லது ஜனாதிபதி வழங்க வேண்டிய உத்தரவுகளை, 142வது பிரிவின்கீழ் வேறு வகையில் கோர்ட் பிறப்பிக்க முடியுமா?

11) சட்டசபையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவை, கவர்னர் ஒப்புதல் தராமலேயே சட்டமாக அமல்படுத்த முடியுமா?

12) ஒரு வழக்கில்,அரசியலமைப்பு சட்டம் தொடர்பான கேள்வி எழும்போது, அச்சட்டத்தின் 145 (3) பிரிவின்படி, குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் உள்ள அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பது கட்டாயமா?

13) பிரிவு 142ன் படி, அமலில் உள்ள சட்ட நடைமுறைகளுக்கு எதிராக, முரண்பட்ட, குறைபாடான உத்தரவுகளை சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்க வழி இருக்கிறதா?

14) மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான விவகாரத்தில், 131வது பிரிவின்படி சிறப்பு வழக்கு தொடுப்பதை தவிர, சுப்ரீம் கோர்ட்டின் அதிகார வரம்பை எந்த வகையிலாவது அரசியல் சாசனம் தடுக்கிறதா?

சட்டப்பிரிவு 200 சொல்வது என்ன?


சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னருக்கு உள்ள பங்கை சட்டப்பிரிவு, 200 கையாள்கிறது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது, நிறுத்தி வைப்பது, திருப்பி அனுப்புவது, ஜனாதிபதியின் பரிசீலனைக்காக அனுப்புவது ஆகிய கவர்னரின் வாய்ப்புகளை இது வழங்குகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us