திருச்சூர் அருகே சிசுக்கள் குழி தோண்டி புதைப்பு: காதலன், காதலியிடம் போலீசார் விசாரணை
திருச்சூர் அருகே சிசுக்கள் குழி தோண்டி புதைப்பு: காதலன், காதலியிடம் போலீசார் விசாரணை
திருச்சூர் அருகே சிசுக்கள் குழி தோண்டி புதைப்பு: காதலன், காதலியிடம் போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 30, 2025 06:43 AM
பாலக்காடு:
திருச்சூர் அருகே, காதலனும் காதலியும் சேர்ந்து இரண்டு சிசுக்களை குழி தோண்டி புதைத்தாக, புகார் தெரிவித்ததையடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் புதுக்காடு வெள்ளிக்குளங்கரை பகுதியைச் சேர்ந்தவர் பவின், 26. கூலித்தொழிலாளி.
அவர் புதுக்காடு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, நானும் என் காதலி அனீஷாவும், 22, சேர்ந்து, இரு சிசுக்களை குழிதோண்டி புதைத்ததாகவும், அந்த சிசுக்களின் எலும்புகளை பையில் கொண்டு வந்து போலீசாருக்கு காண்பித்துள்ளார்.
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த புதுக்காடு போலீசார், இருவரையும் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, திருச்சூர் ரூரல் எஸ்.பி., கிருஷ்ணகுமார் கூறியதாவது:
பவினிடம் நடத்திய விசாரணையில், வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரும், 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இது இரு வீட்டாருக்கும் தெரியாது.
கடந்த 2021ல் இவர்களது தொடர்பில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தொப்புள் கொடி கழுத்தில் சுற்றி இறந்தே பிறந்த குழந்தையை, பெண்ணின் வீட்டு வளாகத்தில் இருவரும் சேர்ந்து குழி தோண்டி புதைத்தனர்.
அனீஷா, வீட்டாரிடம் கர்ப்பமானதை மறைத்துள்ளார். அதேபோல் வீட்டாருக்கு தெரியாமல், 2024ல் மீண்டும் அனீஷா கர்ப்பமானார். தொடர்ந்து பிறந்த ஆண் குழந்தையை அனீஷா கழுத்து நெறித்து கொன்றுள்ளார்.
அந்த குழந்தையையும் இருவரும் சேர்ந்து குழி தோண்டி புதைத்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்தனர். இதில் மனமுடைந்த பவின், குழி தோண்டி புதைத்த இரு சிசுக்களின் எலும்புகளை, பையில் எடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து தகவல் தெரிவித்துள்ளார்.
சிசுக்களின் எலும்புகளை பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பியுள்ளோம். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு, ரூரல் எஸ்.பி., கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.