Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/முதல்வர் சித்தராமையா அறைய முயன்ற காவல் அதிகாரி விருப்ப ஓய்வு; பா.ஜ., கடும் விமர்சனம்

முதல்வர் சித்தராமையா அறைய முயன்ற காவல் அதிகாரி விருப்ப ஓய்வு; பா.ஜ., கடும் விமர்சனம்

முதல்வர் சித்தராமையா அறைய முயன்ற காவல் அதிகாரி விருப்ப ஓய்வு; பா.ஜ., கடும் விமர்சனம்

முதல்வர் சித்தராமையா அறைய முயன்ற காவல் அதிகாரி விருப்ப ஓய்வு; பா.ஜ., கடும் விமர்சனம்

ADDED : ஜூலை 03, 2025 02:07 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: நிகழ்ச்சி மேடையில் முதல்வர் சித்தராமையா அறைய முயன்றதால், மனவிரக்தி அடைந்த ஏ.எஸ்.பி., நாராயண் பரமணி விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவரது மனு மீது நடவடிக்கை எடுக்காமல், கர்நாடகா அரசு அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த ஏப்.,28ம் தேதி விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் மேடையில் முதல்வர் சித்தராமையா பேச முயன்ற போது, கூட்டத்தில் பா.ஜ., பெண் ஆதரவாளர்கள் அவருக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

இதனைக் கண்டு கோபமடைந்த முதல்வர் சித்தராமையா, மேடையின் ஓரத்தில் நின்றிருந்த ஏ.எஸ்.பி., பரமணியை அழைத்து கடிந்து கொண்டார். மேலும், கோபத்தில் கையை ஓங்கி அறைய முயன்றார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையானது. பா.ஜ., மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

முதல்வரின் செயலால் மனவிரக்தி அடைந்த ஏ.எஸ்.பி., பரமணி, கடந்த ஜூன் 14ம் தேதி விருப்ப ஓய்வு கேட்டு உள்துறை செயலகத்திற்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி இருந்தார். அந்தக் கடிதத்தில், பெலகாவியில் நடந்த ஒரு அரசியல் நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையாவால் அவமானப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அவர் கூறியிருப்பதாவது; முதல்வர் என்னை அடிக்க முயன்ற போது, நான் உடனடியாக பின்னே சென்று அதனை தவிர்த்தேன். இருப்பினும், இந்த விவகாரம் 2 நாட்கள் டிவி சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டேன். இது என்னுடைய மன உறுதியை சீர்குலைத்தது. ஒரு வாரம் என்னுடைய வீடே துக்க வீடு போல இருந்தது. குறிப்பாக, என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் மனமுடைந்து போகினர். இந்த சம்பவத்திற்குப் பிறகு எந்த மூத்த அதிகாரியும் அவரை அணுகவில்லை.

நான் 31 ஆண்டுகள் நேர்மையாக கர்நாடக காவல் துறைக்கு சேவை செய்துள்ளேன். இந்த சீருடையானது, என் தாயுடனான உறவைப் போலவே புனிதமானது. எனக்கே நீதி கிடைக்காத போது, மற்றவர்களுக்கு நீதி வழங்க என்னை எப்படி எதிர்பார்க்க முடியும்?, என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ஏ.எஸ்.பி., பரமணி விருப்ப ஓய்வு கேட்டு 20 நாட்களுக்கும் மேலாகியும், அரசு அதன் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காததை, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.

இந்த வீடியோ பகிர்ந்த கர்நாடகா பா.ஜ., ' முதல்வர் சித்தராமையாவின் சுய விளம்பர காங்கிரஸ் நிகழ்வின் போது, அவமதிக்கப்பட்ட ஏ.எஸ்.பி., ஸ்ரீ நாராயண் பரமணி, தற்போது விருப்ப ஓய்வு கேட்டுள்ளார். இந்த லாட்டரி முதல்வரின் ஆணவத்தால் அவர் எவ்வளவு அவமானத்தை சந்திக்க நேரிட்டது என்பதை நாம் கற்பனை செய்து மட்டுமே பார்க்க முடியும்,'எனக் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல, சித்தராமையாவின் ஆட்சியை, ஹிட்லர் ஆட்சி என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் விமர்சித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us