Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இன்று மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி

இன்று மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி

இன்று மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி

இன்று மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி

UPDATED : செப் 13, 2025 12:34 AMADDED : செப் 12, 2025 02:53 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: பிரதமர் மோடி இன்று ( செப்.,13)மணிப்பூர் செல்கிறார். அப்போது வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. அவ்வப்போது அசம்பாவிதம் தொடர்ந்த நிலையில், அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது. கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்துக்கு பிரதமர் மோடி செல்லவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று ( செப்.,13) மணிப்பூர் செல்ல உள்ளது உறுதியாகி உள்ளது. மணிப்பூர் செல்லும் மோடி, மதியம் 2:30 மணிக்கு சுரசந்த்பூர் செல்கிறார். இடம்பெயர்ந்த மக்களையும், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் சந்திக்கும் அவர்,வளர்ச்சி திட்டங்களையும் துவக்கி வைக்க உள்ளார்.

இது தொடர்பாக மணிப்பூர் தலைமைச் செயலாளர் கூறுகையில், ' பிரதமரின் இந்த பயணம் மாநிலத்தில் அமைதி திரும்பவும், வளர்ச்சி ஏற்படவும் வழி வகுக்கும், ' எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பயண விவரம்:


மணிப்பூர், மிசோரம், அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீஹார் மாநிலங்களுக்கு செல்லும் பிரதமர் மோடி அம்மாநிலங்களில் ரூ.71,850 கோடி மதிப்பு நலத்திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார். நாளை ( செப்.,13) முதல் 15ம் தேதி வரை இம்மாநிலங்களில் பிரதமர் சுற்று பயணம் மேற்கொள்கிறார்.

* நாளை காலை 10 மணிக்கு மிசோரம் செல்லும் மோடி, ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பு ரயில்வே, சாலை, எரிசக்தி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் நலத்திட்டங்களை துவக்கி வைத்து, பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுகிறார். தொடர்ந்து அயிஸ்வால் - டில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ், சாய்ரங் - கவுகாத்தி எக்ஸ்பிரஸ், சாய்ரங் - கோல்கட்டா எக்ஸ்பிரஸ் ரயில் திட்டங்களையும் துவக்கி வைக்கிறார். பல்வேறு சாலை திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

* இதன் பிறகு 12:30 மணிக்கு மணிப்பூரின் சுரசந்த்பூர் செல்லும் பிரதமர் அங்கு ரூ.7, 300 கோடி மதிப்பு திட்டங்களுக்கு (நகர்ப்புற சாலை திட்டம், தேசிய நெடுஞ்சாலை) அடிக்கல் நாட்டுகிறார். பிறகு, பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார். பிறகு 2:30 மணிக்கு இம்பால் சென்று ரூ.1,200 மதிப்பு நலத்திட்டங்களை துவக்கி வைத்து பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

* இதன் பிறகு மாலை 5 மணியளவில் அசாம் தலைநகர் கவுகாத்தி சென்று பாரத ரத்னா விருது பெற்ற பூபென் ஹசாரிகாவின்( இவர் பிரபல பாடகர், பாடல் ஆசிரியர், எழுத்தாளர், திரைப்படதயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்) 100வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்.

*மறுநாள் செப்., 14 ல் அசாமில் ரூ.18,530 கோடி மதிப்பு உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் 11:00 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்திலும் உரையாற்றுகிறார். மதியம் 1:45 மணிக்கு அசாமின் பயோ எத்தனால் தனியார் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலையை திறந்து வைக்கிறார்.

* 15 ம் தேதி மேற்கு வங்கம் சென்று, 16வது ராணுவ அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

* மதியம் 2:45 மணிக்கு பீஹார் செல்லும் அவர் புர்னியா விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைத்து, ரூ.36,000 ஆயிரம் கோடி மதிப்பு வளர்ச்சி திட்டங்களை துவக்கிவைத்து பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

ராகுல் கருத்து


பிரதமரின் மணிப்பூர் பயணம் தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியதாவது: மணிப்பூர் பிரச்னை நீண்ட காலமாக தொடர்கிறது. தற்போதாவது பிரதமர் அங்கு செல்வது நல்ல விஷயம். ஆனால், நாட்டில் தற்போது முக்கியமான விஷயம் ஓட்டுத் திருட்டு. ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவில் மக்களின் உத்தரவுகள் திருடப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us