பாகிஸ்தானில் திருமணம் செய்ய விருப்பம் பாக்., உளவு யு டியூபர் அரட்டை அம்பலம்
பாகிஸ்தானில் திருமணம் செய்ய விருப்பம் பாக்., உளவு யு டியூபர் அரட்டை அம்பலம்
பாகிஸ்தானில் திருமணம் செய்ய விருப்பம் பாக்., உளவு யு டியூபர் அரட்டை அம்பலம்
ADDED : மே 22, 2025 04:57 AM
புதுடில்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள யு டியூபர் ஜோதி மல்ஹோத்ராவின் வாட்ஸாப் உரையாடலை ஆய்வு செய்ததில், அவர் அந்நாட்டில் திருமணம் செய்ய விருப்பப்பட்டது தெரிய வந்துள்ளது.
'வாட்ஸாப்'
ஹரியானாவின், ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. யு டியூபில், 'டிராவல் வித் ஜோ' என்ற பெயரில் பயண சேனல் நடத்தி வரும் இவரை, பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் ஹரியானா போலீசார் கடந்த 17ம் தேதி கைது செய்தனர். அவரிடம் தேசிய புலனாய்வு அமைப்பு, புலனாய்வுப் பிரிவு மற்றும் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோதியின் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் பயண விபரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவருடைய லேப் டாப் உள்ளிட்ட உபகரணங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இவர் அடிக்கடி பாகிஸ்தான் சென்று வந்த நிலையில், அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் அதிகாரிகளை சந்தித்து பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஜோதியின் வாட்ஸாப் உரையாடல்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
உரையாடல்
இதில், பாக்., ஐ.எஸ்.ஐ., அமைப்பைச் சேர்ந்த அலி ஹசனுடன் பலமுறை பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருடன் நடந்த உரையாடலின் போது, தான் பாகிஸ்தானில் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக ஜோதி தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அலி ஹசன், 'ஜோ, நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் ஒருபோதும் ஏமாற்றங்களை சந்திக்கக் கூடாது' என, வாழ்த்து தெரிவித்துள்ளதும் அதில் இடம்பெற்றுள்ளது.
டில்லியில் உள்ள பாக்., துாதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்பவர் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அவரை சமீபத்தில் மத்திய அரசு வெளியேற்றியது.
அவருக்கும், ஜோதி மல்ஹோத்ராவுக்கும் பழக்கம் இருந்ததாகவும், இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.
இந்த சூழலில், அவர் பாகிஸ்தானில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது அதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.