இடுக்கியில் பருவ மழை தீவிரம் இன்று 'ஆரஞ்ச் அலர்ட்'
இடுக்கியில் பருவ மழை தீவிரம் இன்று 'ஆரஞ்ச் அலர்ட்'
இடுக்கியில் பருவ மழை தீவிரம் இன்று 'ஆரஞ்ச் அலர்ட்'
ADDED : ஜூன் 26, 2025 01:58 AM

மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டத்தில் தென் மேற்கு பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மாவட்டத்திற்கு இன்று கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டு, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை வழக்கத்தை விட வெகு முன்னதாக மே 24ல் துவங்கி ஒரு வாரம் கொட்டித்தீர்த்தது. பின்னர் ஒரு வாரம் இடைவெளிக்கு பின் மீண்டும் தீவிரமடைந்தது. அதன்பின் மழையின் தீவிரம் குறைந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் தீவிரமடைந்தது.
இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்ட நிலையில், அதே அலர்ட் இன்று இடுக்கி, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரத்தில் 115.6 முதல் 204.4 மி.மீ., வரை மழை பெய்யவும், பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்கள் தவிர 9 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
தீவிரம்
மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பருவ மழை தீவிரமடைந்து மலையோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் சராசரி மழை 46.4 மி.மீ., பதிவானது. அதிகபட்சமாக தேவிகுளம் தாலுகாவில் 87.2, மிகவும் குறைவாக தொடுபுழா தாலுகாவில் 16 மி.மீ., மழை பெய்தது. மிகவும் கூடுதலாக மூணாறில் 110.4 மி.மீ., மழை பதிவானது. மலையோரப் பகுதிகளில் மண், நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
துண்டிப்பு
மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சியில் நேற்று முன் தினம் முதல் கன மழை பெய்து வருகிறது. அதனால் நேற்று காலை பாம்புகயம் ரோடு சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மாவட்டத்தில் மழை தொடரும் பட்சத்தில் கன மழைக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அங்கன்வாடி முதல் பள்ளி, கல்லுாரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளித்து இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி உத்தரவிட்டார்.