ஆன்லைன் சூதாட்ட தடை; மாநிலங்களே சட்டம் இயற்றலாம்
ஆன்லைன் சூதாட்ட தடை; மாநிலங்களே சட்டம் இயற்றலாம்
ஆன்லைன் சூதாட்ட தடை; மாநிலங்களே சட்டம் இயற்றலாம்
ADDED : மார் 27, 2025 12:46 AM

புதுடில்லி : 'ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய, மாநிலங்களே சட்டங்களை வகுக்க முடியும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது, தி.மு.க., - எம்.பி., தயாநிதி கூறுகையில், ''தமிழகத்தில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை, மாநில அரசு தடை செய்துள்ளது. ஆனால் இந்த தார்மீக பொறுப்பில் இருந்து மத்திய அரசு விலகுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அனைத்து சூதாட்ட தளங்களையும் தடை செய்ய, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?'' என, கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: மத்திய அரசின் தார்மீக அதிகாரத்தை கேள்வி கேட்க தயாநிதிக்கு எந்த உரிமையும் இல்லை. அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்ட கூட்டாட்சி கட்டமைப்பின்படி, நாடு செயல்படுகிறது.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய, சட்டங்களை இயற்ற, நம் அரசியலமைப்பு சட்டம் மாநிலங்களுக்கு சட்ட அதிகாரத்தை வழங்குகிறது. எனவே இதில் மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம். புகார்களின் அடிப்படையில், 1,410 சூதாட்ட தளங்கள் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.