500 ரூபாய் நோட்டுகளை மூட்டை கட்டி வீசிய அதிகாரி
500 ரூபாய் நோட்டுகளை மூட்டை கட்டி வீசிய அதிகாரி
500 ரூபாய் நோட்டுகளை மூட்டை கட்டி வீசிய அதிகாரி
ADDED : மே 31, 2025 04:15 AM

புவனேஸ்வர்: ஒடிஷாவில் வருமானத் துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில், அரசு தலைமைப் பொறியாளர் வீட்டில் இருந்து 2.1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீஸ் சோதனைக்கு பயந்து, 500 ரூபாய் நோட்டுகளை சாக்கில் மூட்டையாக கட்டி, ஜன்னல் வழியாக அவர் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சோதனை
ஒடிஷாவில் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு புவனேஸ்வரில் உள்ள ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் சாலை திட்ட பணிகள் பிரிவு இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்தின் தலைமை பொறியாளராக பைகுந்தநாத் சாரங்கி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து, பைகுந்தநாத்துக்கு சொந்தமான இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். புவனேஸ்வர் மற்றும் அங்குலில் உள்ள அவரது வீடுகள், அலுவலகம் என மொத்தம் ஒன்பது இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
புரி மாவட்டம் சியூலா, பிபிலி ஆகிய பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
புவனேஸ்வரில் உள்ள வீட்டில் 1 கோடி ரூபாயும், அங்குலில் உள்ள மற்றொரு வீட்டில் 1.1 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.
டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், ஏ.எஸ்.ஐ., உட்பட 26 பேர் அடங்கிய போலீசார் குழு, இந்த சோதனையில் ஈடுபட்டது.
பறிமுதல்
புவனேஸ்வரில் நடந்த சோதனையின்போது, போலீசாரை பார்த்த பைகுந்தநாத், 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய மூட்டையை ஜன்னல் வழியே வீசியதால் பரபரப்பு நிலவியது. புவனேஸ்வரில் அவரது அலுவலகத்தில் நடந்த சோதனையின் முடிவில், ஏராளமான 500, 200, 100, 50 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றை எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் முடிவில்தான் கைப்பற்றப்பட்ட மொத்த தொகை எவ்வளவு என்ற விபரம் தெரிய வரும் என, போலீசார் தெரிவித்தனர். பைகுந்தநாத் மற்றும் அவரின் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.