ஆக்கிரமிப்பு காஷ்மீர் வெளிநாட்டு பிரதேசம்: ஐகோர்ட்டில் பாக்., அரசு ஒப்புதல்
ஆக்கிரமிப்பு காஷ்மீர் வெளிநாட்டு பிரதேசம்: ஐகோர்ட்டில் பாக்., அரசு ஒப்புதல்
ஆக்கிரமிப்பு காஷ்மீர் வெளிநாட்டு பிரதேசம்: ஐகோர்ட்டில் பாக்., அரசு ஒப்புதல்
ADDED : ஜூன் 02, 2024 04:25 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் , ஒரு வெளிநாட்டு பிரதேசம் என இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் வசித்து வந்த காஷ்மீர் கவிஞர் மற்றும் பத்திரிகையாளருமான அஹமத் பர்ஹத் ஷாவை, அவரது வீட்டில் இருந்து அந்நாட்டு உளவுத்துறை அதிகாரிகள் கடத்திச்சென்றனர். அவரை மீட்டுத் தரும்படி அவரது மனைவி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி மோஷின் அக்தர் கயானி, கடத்தப்பட்ட அஹமத் பர்ஹத் ஷாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நேற்று முன்தினம்( மே 31) விசாரணைக்கு வந்த போது பாகிஸ்தான் அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறியதாவது: பர்ஹத் ஷா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளார். இதனால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது. பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஒரு வெளிநாட்டு பிரதேசம். அதற்கு என தனி அரசியலமைப்பு மற்றும் நீதிமன்றம் உள்ளது. பாகிஸ்தான் நீதிமன்றத்தின் உத்தரவுகள், அங்கு வெளிநாட்டு நீதிமன்ற உத்தரவுகளாகவே கருதப்படும் என்றார்.
இதனை கேட்ட நீதிபதி கயானி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வெளிநாட்டு பிரதேசம் என்றால், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ரேஞ்சர்கள் எப்படி அங்கே உள்ளே நுழைந்தனர் எனக்கேள்வி எழுப்பியதுடன், உளவுத்துறையினர் கடத்தல் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது என கண்டித்தார்.