யமுனை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு டில்லியில் பல இடங்களில் மழை நீர் சூழ்ந்தது
யமுனை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு டில்லியில் பல இடங்களில் மழை நீர் சூழ்ந்தது
யமுனை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு டில்லியில் பல இடங்களில் மழை நீர் சூழ்ந்தது
ADDED : செப் 05, 2025 01:49 AM
புதுடில்லி:டில்லியில் பாயும் யமுனை நதி, 207 மீட்டர் உயரத்தை தாண்டி பாய்வதாலும், கரையோர பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை, 11 - 12 மணி நிலவரப்படி, ஒல்டு ரயில்வே பிரிட்ஜ் பகுதியில் 207.46 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் பாய்ந்தது. அதற்கு முன், நேற்று காலை 6:00 - 7:00 மணி வரை 207.48 மீட்டரை வெள்ள நீர் தொட்டது.
நீரின் வெள்ள அளவு, காலை 6:00 மணிக்கு பின், நிலையாகி, 207.47 என்ற அளவிலேயே தொடர்ந்தது.
வெள்ள நீரின் பாதிப்பு, கடந்த ஆண்டை விட சற்று குறைவாகவே இருந்தது. முதல்வர், கேபினட் அமைச்சர்கள் போன்றோரின் வீடுகள் அமைந்துள்ள டில்லி தலைமைச் செயலக கட்டடம் அமைந்துள்ள இடத்தின் அருகே வெள்ள நீர் புகுந்தது.
வசுதேவ் காட் பகுதியில் வெள்ள நீரால் பாதிப்பு ஏற்பட்டது. மயூர் விஹார் பேஸ் 1 மற்றும் சில நிவாரண முகாம்களில் யமுனை நதியின் வெள்ள நீர் புகுந்தது.
மோனாஸ்ட்ரி மார்க்கெட் மற்றும் யமுனை பஜார் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. அதுபோல, காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள ஸ்ரீ மார்க்கெட் வாலி ஹனுமான் பாபா மந்திர் கோவிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது.
பக்தர் ஒருவர் கூறும் போது,'ஒவ்வொரு ஆண்டும் யமுனை நதியில் வெள்ளம் அதிகரித்த வண்ணமாக உள்ளது. கடவுள் அனுமன் சிலையை கூட தண்ணீர் மூழ்க அடிக்கிறது. எனினும், அந்த நீர் புனிதமானது' என்றார்.
நிகாம்போத் காட் என்ற இடத்தில் யமுனை நதியின் வெள்ள நீர் புகுந்தது. அந்த பகுதியில் உள்ள கீதா காலனி மயானம், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. எனினும், அந்த பகுதியில் எவ்வித பாதிப்பும் இன்றி, உடல்கள் தொடர்ந்து எரியூட்டப்பட்டன.
'கடந்த, 2023ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த மயானம் நீரில் மூழ்கியது. இப்போது, 10 அடி உயரத்திற்கு தண்ணீர் நிற்கிறது. பிணங்களை எரிக்க வைத்திருந்த மரப்பொருட்கள் முழுவதும் நனைந்து விட்டன. அரசு தரப்பில் எந்த உதவியும் செய்யப்படவில்லை' என, சஞ்சய் சர்மா என்பவர் கூறினார்.
யமுனை நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் கடந்த இரண்டு நாட்களாக இடை விடாமல் பெய்யும் மழையால், டில்லி நகர மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சந்த்தி ராம் அகாடா அருகே சிவில் லைன்ஸ் பகுதியில், வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 'ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும், இந்த பகுதியில் நீர் சூழ்ந்து விடுகிறது. இதை சரி செய்ய எந்த அரசும் தயாராக இல்லை' என, அப்பகுதி மக்கள் கூறினர்.
நேற்றைய புள்ளிவிவரப்படி, யமுனை நதியின் கரையோரங்களில் வசித்த 8018 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில், 2020 பேர் நிரந்தர காப்பங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், டில்லி மாநில அரசு தரப்பில், 'பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. 24 மணி நேரமும் அரசு தரப்பில் கண்காணிப்பு செய்யப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.