நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை: புறக்கணிக்க கர்நாடகா முடிவு
நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை: புறக்கணிக்க கர்நாடகா முடிவு
நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை: புறக்கணிக்க கர்நாடகா முடிவு
ADDED : ஜூலை 24, 2024 03:37 PM

பெங்களூரு: மத்திய பட்ஜெட்டில் கர்நாடகா புறக்கணிக்கப்பட்டதாக கூறி, பிரதமர் தலைமையில் நடக்க உள்ள நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக முதல்வர் சித்தராமையா அறிவித்தார். 'நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடக மக்களின் கவலைகளை புறக்கணித்துள்ளார். நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை' என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பார்லிமென்ட்டில் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கர்நாடகாவின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என, மாநில முதல்வர் சித்தராமையா அரசு குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் தன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: கர்நாடகாவின் அத்தியாவசிய தேவைகள் குறித்து விவாதிக்க புதுடில்லியில் அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க, நான் தீவிரமாக முயற்சித்தேன். எனினும் மத்திய பட்ஜெட், நமது மாநிலத்தின் கோரிக்கைகளை புறக்கணித்துவிட்டது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடக மக்களின் கவலைகளை புறக்கணித்துள்ளார். கன்னடர்கள் கேட்பதை அவர்கள் உணரவில்லை. எனவே நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. நம்முடைய எதிர்ப்பைக் காட்டும் விதமாக, 27ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
மேகதாது மற்றும் மகதாயி ஆகிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகள் கூட புறக்கணிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பிரிவுகளின் கீழ் நம் மாநிலத்திற்கு நிதியைக் குறைத்த பாவத்தை சரிசெய்ய எந்த முயற்சியும் பட்ஜெட்டில் இல்லை.
மெட்ரோ மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதி இன்னும் தொலைதுாரக் கனவாகவே உள்ளது. ஆந்திரா மற்றும் பீஹார் மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களை மோடியால் பார்க்க முடியாது. ஏனெனில் அவரது கண்கள், பிரதமர் பதவி மீது உள்ளது.
நீதிக்கான எங்கள் போராட்டத்தில் மாநில மக்கள் எங்களுடன் இருப்பர் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.