'ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க காசில்லை; உலக அழகி போட்டிக்கு ரூ.200 கோடியா?' தெலுங்கானாவில் எதிர்க்கட்சிகள் குமுறல்
'ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க காசில்லை; உலக அழகி போட்டிக்கு ரூ.200 கோடியா?' தெலுங்கானாவில் எதிர்க்கட்சிகள் குமுறல்
'ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க காசில்லை; உலக அழகி போட்டிக்கு ரூ.200 கோடியா?' தெலுங்கானாவில் எதிர்க்கட்சிகள் குமுறல்
ADDED : மார் 20, 2025 03:43 AM
ஹைதராபாத் : தெலுங்கானாவில் கடும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், உலக அழகி போட்டியை நடத்துவதற்கு, பட்ஜெட்டில், 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதற்கு, பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்ட்ர சமிதி கண்டனம் தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது.
இம்மாநில தலைநகர் ஹைதராபாதில், வரும் மே 7 - 31 வரை, 72வது உலக அழகி போட்டி நடக்கிறது. இதற்கு மாநில பட்ஜெட்டில், 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று, சட்டசபை கூடியதும், உலக அழகி போட்டிக்கு, பட்ஜெட்டில், 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பி.ஆர்.எஸ்., - எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.
இது குறித்து, பி.ஆர்.எஸ்., செயல் தலைவர் கே.டி.ராமா ராவ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:
எங்கள் ஆட்சியில், ஹைதராபாதில் இ - பார்முலா கார் பந்தயம் நடத்த, 46 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது, காங்., நிர்வாகிகளுக்கு தவறாக தெரிந்தது. இதற்காக எங்கள் மீது வழக்கு போட்டனர்.
ஆனால் தற்போது, உலக அழகி போட்டியை நடத்த, 200 கோடி ரூபாயை காங்., அரசு ஒதுக்கியுள்ளது. இது சரியா? இதெல்லாம் என்ன நியாயம்? இது குறித்து ராகுல் விளக்க வேண்டும்.
தெலுங்கானாவில், 71,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை; சம்பளம் வழங்க பணமில்லை; அகவிலைப்படி கொடுக்க முடியவில்லை என, முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டசபையில் தெரிவித்தார்.
தற்போது அழகி போட்டியை நடத்த மட்டும் எப்படி பணம் வந்தது? காங்கிரசின் தவறான அணுகுமுறைகள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைக்கின்றன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.