என்.ஐ.ஏ., அல்லது சி.பி.ஐ., விசாரணை: தர்மஸ்தலா வழக்கில் பா.ஜ., கோரிக்கை
என்.ஐ.ஏ., அல்லது சி.பி.ஐ., விசாரணை: தர்மஸ்தலா வழக்கில் பா.ஜ., கோரிக்கை
என்.ஐ.ஏ., அல்லது சி.பி.ஐ., விசாரணை: தர்மஸ்தலா வழக்கில் பா.ஜ., கோரிக்கை
ADDED : செப் 02, 2025 02:52 AM

தட்சிண கன்னடா: 'தர்மஸ்தலா விவகாரத்தில், என்.ஐ.ஏ., அல்லது சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என, கர்நாடக பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்தினர்.
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், தர்மஸ்தலாவில், 'தர்மஸ்தலாவை பாதுகாப்போம்' என்ற பெயரில் நேற்று மாநில பா.ஜ., சார்பில் மாநாடு நடந்தது.
மாநாட்டில், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பேசியதாவது:
தர்மஸ்தலா குறித்து தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதற்கு பின்னால் ஒரு சதி உள்ளது. இவ்வழக்கு விசாரணையை, உடனடியாக என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு அல்லது சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஹிந்து விரோத சக்திகள், கோடிக்கணக்கில் பணம் பெற்று, தர்மஸ்தலா குறித்து பொய் பிரசாரம் செய்து வருகின்றன. மாநில காங்கிரஸ் அரசால், இந்த சக்திகளை அடக்க முடியாது. சி.பி.ஐ., அல்லது என்.ஐ.ஏ., விசாரணை மூலமாகவே நீதியை நிலைநாட்ட முடியும்.
ஹிந்துக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம். தர்மஸ்தலாவை பாதுகாப்போம் என்ற போராட்டத்தை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இம்மாநாடு, ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் அரசை எச்சரிக்கும் மாநாடு. தர்மஸ்தலா ஒரு சிறிய கோவில் அல்ல; கோடிக்கணக்கான பக்தர்களின் புனித தலம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய உணவு வினியோக துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பேசுகையில், ''நாட்டின் பெரும்பான்மையினருக்கு எதிராக காங்கிரஸ் சதி செய்து வருகிறது. தர்மஸ்தலா சம்பவம் அதன் தொடர்ச்சியாகும். சபரிமலையின் நம்பிக்கையை சீர்குலைக்கும் முயற்சிக்கு பின், தர்மஸ்தலாவின் பெயரை கெடுக்க, முயற்சிக்க துவங்கி உள்ளனர்.
''இதுவே வேறு மதத்தைச் சேர்ந்த இடத்தில் உடல் புதைக்கப்பட்டிருந்தால், அங்கேயும் சென்று தோண்டுவரா? தர்மஸ்தலாவில், 16 இடங்களை தோண்டிய பின்னரும், அப்பணியை நிறுத்த காங்கிரஸ் அரசுக்கு மனமில்லை. மக்கள் கோபப்பட துவங்கிய பின்னரே நிறுத்தினர். சித்தராமையா தலைமையிலான அரசின் முடிவு நெருங்கிவிட்டது,'' என்றார்.