எதற்கும், யாருக்கும் அஞ்ச மாட்டோம்! மோடி சபதம்
எதற்கும், யாருக்கும் அஞ்ச மாட்டோம்! மோடி சபதம்
எதற்கும், யாருக்கும் அஞ்ச மாட்டோம்! மோடி சபதம்

தார் : “அணு ஆயுதம் உள்ளிட்ட எந்த தாக்குதலுக்கும், எதற்கும், யாருக்கும் புதிய இந்தியா அஞ்சாது,” என, தன் 75வது பிறந்த நாளில் பிரதமர் மோடி சபதம் செய்துள்ளார்.
மத்திய பிரதேசம் தார் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், 2,200 ஏக்கரில் அமைய இருக்கும் நாட்டின் மிகப்பெரிய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை பூங்காவுக்கு பிரதமர் நேற்று அடிக்கல் நாட்டினார். பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 'ஸ்வஸ்த் நாரி சஷக்த் பரிவார்' மற்றும் '8வது ராஷ்ட்ரிய போஷன் மா' பிரசாரங்களை மோடி துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: பாகிஸ்தான் பயங்கரவாதிகள், நம் சகோதரிகள் மற்றும் மகள்களின் குங்குமத்தை அழித்தனர். இதற்கு பதிலடியாக, அவர்களின் வசிப்பிடத்துக்கே சென்று பயங்கரவாத தளங்கள் அழிக்கப்பட்டன. துணிச்சலான நமது வீரர்கள், பாகிஸ்தானை மண்டியிட வைத்தனர். முன்பு, நம் நாட்டுக்குள் புகுந்து அச்சுறுத்தும் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போது, அவர்களையே தேடிச் சென்று அழிக்கிறோம்.
ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையில், நம் வீரர்கள் திறம்பட பணியாற்றினர். ஒரு பயங்கரவாதி கண்ணீர் சிந்தியபடி, தங்கள் அவல நிலையை சமூக ஊடகத்தில் விவரித்ததை உலகமே பார்த்தது. பயங்கரவாதிகளின் தளங்கள் அழிக்கப்பட்டதை அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.
இது புதிய இந்தியா. அணு ஆயுதம் உள்ளிட்ட எந்தவித தாக்குதலுக்கும் அஞ்சாது. எதற்கும், யாருக்கும் பயப்படாது. ஒவ்வொரு குடிமகனும், நாட்டுக்காக தன்னை அர்ப்பணிக்க வேண்டும். வரும் 2047ல், வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைய வேண்டும் என்றால், சுயசார்பு இந்தியா திட்டத்தை நாம் அவசியம் பின்பற்ற வேண்டும்.
இந்த பண்டிகை காலத்தில், சுதேசி மந்திரத்தை நினைவில் கொண்டு, நம் வாழ்வில் இணைக்க வேண்டும். நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளும் இந்திய தயாரிப்பாக இருக்க வேண்டும். அந்தப் பொருட்களின் உற்பத்திக்கான பின்னணியில், இந்தியரின் வியர்வை இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.