Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 'என் தாயை அவமானப்படுத்திவிட்டனர்': பிரதமர் நரேந்திர மோடி வேதனை

'என் தாயை அவமானப்படுத்திவிட்டனர்': பிரதமர் நரேந்திர மோடி வேதனை

'என் தாயை அவமானப்படுத்திவிட்டனர்': பிரதமர் நரேந்திர மோடி வேதனை

'என் தாயை அவமானப்படுத்திவிட்டனர்': பிரதமர் நரேந்திர மோடி வேதனை

ADDED : செப் 03, 2025 06:35 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ''பீஹாரில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., கட்சியினர் என் தாயார் பற்றி அவதுாறாக பேசியது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி இருக்கிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கண் கலங்கியபடி தெரிவித்தார்.

பீஹாரில், மகளிர் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் புதிய கூட்டுறவு திட்டத்தை, பிரதமர் மோடி டில்லியில் இருந்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் துவக்கி வைத்தார். அப்போது தன் தாயார் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதில், பிரதமர் பேசியதாவது:

தாய் தான் நம் உலகம். தாய் தான் நம் சுயமரியாதை. ஆனால், ஒருசில நாட்களுக்கு முன் பண்பாடு நிறைந்த பீஹாரில் நடந்த ஒரு சம்பவத்தை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

அப்போது நடந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., அரசியல் கூட்டத்தில் என் தாய் அவமானப்படுத்தப்பட்டார்.

அது என் தாய்க்கு மட்டும் நேர்ந்த அவமானம் அல்ல. நம் நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும், சகோதரியருக்கும், மகள்களுக்கும் நேர்ந்த அவமானம்.

இதை நினைத்து, பீஹாரில் உள்ள ஒவ்வொரு தாயின் மனமும் எப்படி வேதனைப்படும் என்பதை என்னால் உணர முடிகிறது. என் மனம் காயப்பட்டதை விட, பீஹார் மக்களின் மனம் அதிகமாக காயப்பட்டிருக்கும் என்பதையும் நான் உணர்கிறேன்.

ஒரு ஏழை தாய் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து, இன்னல்களுக்கு நடுவே தன் குழந்தைக்கு கல்வியறிவு புகட்டி, உன்னத நல்லொழுக்கத்தையும் கற்றுத் தருகிறார்.

அதனால் தான் தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என்கின்றனர். தாய்க்கு பின் தான் கடவுளையும் வைத்தனர். ஆனால், வசதியான குடும்பத்தில் பிறக்கும் இளம் இளவரசர்களுக்கு சாதாரண தாயின் தியாகமும், வாழ்க்கை போராட்டமும் புரியாது.

அரசியலில் எந்த பங்கும் வகிக்காத என் தாயாரை ஆர்.ஜே.டி., - காங்., மேடையில் ஏன் அவமதித்தனர் என தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் உயிருடன் கூட இல்லை. நான் தனியே பிரிந்து செல்ல என் தாயார் அனுமதித்தார். அதன் காரணமாகவே, கோடிக்கணக்கான தாய்மார்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

இவ்வாறு பிரதமர் மோடி உருக்கமாக பேசினார்.

பீஹாரின் தர்பங்காவில் கடந்த ஆக., 28ம் தேதி காங்., - எம்.பி., ராகுலின் வாக்காளர் உரிமை யாத்திரை நடந்தது. இதையொட்டி ஆர்.ஜே.டி., மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் மேடை அமைக்கப்பட்டது.

அப்போது தலைவர்கள் யாரும் வராத நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மைக்கில், பிரதமர் மோடியின் தாயை பற்றி கருத்து கூறியிருந்தது சர்ச்சையானது.

அதன்பின் அந்த நபர் முகமது ரிஸ்வி என்ற ராஸா, 20, என அடையாளம் காணப்பட்ட நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்.

எனினும், இந்த சம்பவத்துக்கு ராகுலோ, தேஜஸ்வி யாதவோ இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, ராகுல் இதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

13ல் மணிப்பூர் செல்கிறார்


வ டகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கலவரம் நடந்து இரண்டு ஆண்டுகளான நிலையில், பிரதமர் மோடி முதன்முறையாக, வரும் 13ல் அங்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமில், பைராபி- - சாய்ராங் இடையே, 51.38 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இது, அசாமின் சில்சார் வழியாக, மிசோரமை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. இந்த ரயில் திட்டத்தை துவக்கி வைக்க, பிரதமர் மோடி வரும் 13ல் மிசோரம் செல்கிறார்.
இதன்பின், அன்றைய தினமே இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு, அவர் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. மணிப்பூரில், கூகி - மெய்டி பிரிவினரிடையே இட ஒதுக்கீடு தொடர்பாக, 2023 மே மாதம் மோதல் வெடித்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கையால் படிப்படியாக இயல்புநிலை திரும்பியது. எனினும் அவ்வப்போது சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன.
இதையடுத்து, முதல்வராக இருந்த பா.ஜ., மூத்த தலைவர் பைரேன் சிங், கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்தார். தொடர்ந்து, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 'வன்முறை நடந்து இரண்டு ஆண்டுகளான நிலையிலும், மணிப்பூருக்கு பிரதமர் மோடி ஒருமுறை கூட செல்லவில்லை' என, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டின. இந்நிலையில், கலவரம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின், வரும் 13ல், பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல இருப்பது கவனம் பெற்றுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us