ADDED : செப் 22, 2025 12:52 AM
துமகூரு: கர் நாடகாவில், கணவரின் கொடுமையால் விரக்தி அடைந்த மனைவி, இரண்டு குழந்தைகளை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார் .
கர் நாடக மாநிலம், துமகூரு மாவட்டத்தில் வசிப்பவர் சந்தோஷ், 28; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரிதா, 23. தம்பதிக்கு கவுஷிக், 3, என்ற மகனும், யுக்தி, 2, என்ற மகளும் இருந்தனர். திருமணமான நாளில் இருந்தே, வரதட்சணை கேட்டு சரிதாவை கணவரும், அவரது தாயும் துன்புறுத்தி வந்தனர். இதனால், அவர் மன அழுத்தத்துக்கு ஆளானார். நேற்று முன்தினம் காலையும், இதே விஷயமாக வீட்டில் வாக்குவாதம் நடந்தது.
இதனால் விரக்தியடைந்த சரிதா, இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒரு குழந்தையை கழுத்தை நெரித்தும், மற்றொரு குழந்தையை கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளார். சந்தோஷ் பணி முடிந்து, வீட்டுக்கு வந்தபோது, மனைவியும், குழந்தைகளும் இறந்து கிடப்பதை பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார், சந்தோஷ் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்துகின்றனர்.