பருவமழை துவக்கம்: டில்லிவாசிகள் மகிழ்ச்சி
பருவமழை துவக்கம்: டில்லிவாசிகள் மகிழ்ச்சி
பருவமழை துவக்கம்: டில்லிவாசிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 29, 2025 09:55 PM

புதுடில்லி:தலைநகர் டில்லி, அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பருவமழை துவங்கியது.
டில்லி மற்றும் தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் மிதமான மழை பெய்தது.
காலை 11:00 மணிக்கு வசந்த் குஞ்ச், ஹவுஸ் காஸ், மாளவியா நகர், கல்காஜி, மெஹ்ராலி, துக்ளகாபாத், சத்தர்பூர், இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலை, அயா நகர் மற்றும் டெராமண்டி ஆகிய பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது.
நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டமாக இருந்தது. மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப் உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானிலும் நேற்று பலத்த மழை பெய்தது.
நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பொதுத் தலைநகரான சண்டிகரில், 11.95 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது.
பஞ்சாபின் பெரோஸ்பூர், மொஹாலி, லுாதியானா, பாட்டியாலா, பதான்கோட், ரூப்நகர் ஆகிய இடங்களிலும் மிதமான மழை பெய்தது.
ஹரியானாவின் அம்பாலாவில், 91 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. ரோஹ்தக், குருகிராம், கைதல், நுஹ் மற்றும் பஞ்ச்குலா ஆகிய இடங்களிலும் பலத்த மழை கொட்டியது. யமுனாநகர், அம்பாலா, கர்னால், பானிபட், சோனிபட், குருக்ஷேத்ரா, கைதல், கர்னல், பாட்டியாலா, சங்ரூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.