95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் மோடி பெருமிதம்
95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் மோடி பெருமிதம்
95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் மோடி பெருமிதம்
ADDED : ஜூன் 30, 2025 01:40 AM

புதுடில்லி: ''நாட்டின் 95 கோடி மக்கள் ஏதாவது ஒரு சமூக பாதுகாப்பு திட்டத்தால், தற்போது பயனடைந்து வருகின்றனர். ஆனால், காங்., ஆட்சியில் இருந்தபோது 25 கோடி மக்களே பயனடைந்தனர். என் தலைமையிலான அரசு, அனைவருக்கும் வளர்ச்சி என்ற பாதையில் பயணித்து வருகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நாட்டின் பிரதமராக, 2014ல், பா.ஜ.,வைச் சேர்ந்த நரேந்திர மோடி பதவியேற்றார். அப்போது முதல், ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், 'மன் கீ பாத்' எனப்படும், 'மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சி வாயிலாக, நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றி வருகிறார்.
நேற்று ஒலிபரப்பான இதன் 123வது அத்தியாயத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
சர்வதேச தொழிலாளர் அமைப்பு சமீபத்தில் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தியாவின் 64 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள், ஏதேனும் ஒரு சமூக பாதுகாப்பு திட்டத்தால் பயன் அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சமூக பாதுகாப்பு என்பது உலகின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்று.
நாட்டில் தற்போது, 95 கோடி பேர் ஏதாவது ஒரு சமூக பாதுகாப்பு திட்டத்தால் பயன் அடைந்து வருகின்றனர்.
ஆனால் மத்தியில் காங்., ஆட்சி இருந்தவரை, இந்த எண்ணிக்கை மிகக்குறைந்த அளவில் இருந்தது. அக்கட்சி ஆட்சியில், 25 கோடி மக்களுக்கு மட்டுமே சமூக நலத்திட்டங்களின் பயன்கள் சென்றடைந்தன.
சுகாதாரம் முதல் சமூக பாதுகாப்பு வரை, ஒவ்வொரு துறையிலும் நம் நாடு சிறந்து விளங்குகிறது.
இது சமூக நீதிக்கான ஒரு சிறந்த அடையாளம். இந்த வெற்றி வரவிருக்கும் காலம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
'ட்ராக்கோமா' என்பது கண்களை பாதிக்கும் ஒரு தொற்று நோய். ஒரு காலத்தில் இந்த தொற்று நாடு முழுதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது, 'ட்ரோக்கோமா' இல்லாத நாடாக, நம் நாடு மாறி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த பாக்டீரியா தொற்றை ஒழித்ததில், 'துாய்மை இந்தியா, ஜல்ஜீவன்' திட்டங்களின் பங்கு மகத்தானது.
இந்த நேரத்தில் அனைவரது பார்வையும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீது உள்ளது. இந்தியா ஒரு புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. விண்வெளி சென்றுள்ள நம் வீரர் சுபான்ஷு சுக்லா உடன் பேசினேன். இன்னும் சில நாட்கள் விண்வெளி நிலையத்தில் தங்கி அவர் ஆய்வு நடத்த இருக்கிறார்.
மஹாராஷ்டிராவில் உள்ள பட்டோடா கிராமம் முன்மாதிரியாக அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் யாரும் குப்பையை சாலைகளில் வீசுவதில்லை. எந்த கழிவுநீரும் இயந்திர சுத்தகரிப்பு செய்யாமல் ஆற்றில் கலக்கப்படாது.
இந்த கிராமத்தில் கடைபிடிக்கப்படும் முறைகள் மிகவும் பாராட்டத்தக்கது. இந்த கிராமம் சத்ரபதி சாம்பாஜி நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மறக்க முடியாது!
கடந்த, 1975ல், 'எமர்ஜென்சி' எனப்படும் அவசரநிலையை அமல் செய்தவர்கள், நம் அரசியலமைப்பு சட்டத்தை படுகொலை செய்ததுடன், நீதித்துறையையும் அடிமையாக வைத்திருக்க விரும்பினர். அந்த காலத்தில், நாட்டு மக்கள் பெரிய துன்புறுத்தல்களை சந்தித்தனர். இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன; அவற்றை எப்போதுமே மறக்க முடியாது. எமர்ஜென்சியை துணிச்சலுடன் எதிர்த்து போராடியவர்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
- நரேந்திர மோடி, பிரதமர்