Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ கரடுமுரடான செங்குத்து மலைப்பாதையிலும் சாலை விதியை பின்பற்றும் மிசோரம் மக்கள்

கரடுமுரடான செங்குத்து மலைப்பாதையிலும் சாலை விதியை பின்பற்றும் மிசோரம் மக்கள்

கரடுமுரடான செங்குத்து மலைப்பாதையிலும் சாலை விதியை பின்பற்றும் மிசோரம் மக்கள்

கரடுமுரடான செங்குத்து மலைப்பாதையிலும் சாலை விதியை பின்பற்றும் மிசோரம் மக்கள்

UPDATED : செப் 07, 2025 01:28 AMADDED : செப் 07, 2025 01:26 AM


Google News
Latest Tamil News
அடர்ந்த மலைகளும், காடுகளும் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக, மிசோரம் இருக்கிறது. இயற்கை சூழ்ந்து மாசு இல்லாமல், எங்கு பார்த்தாலும் தேக்கு, மூங்கில், வாழை மரங்களால் ரம்மியமாக காட்சியளிக்கிறது. 90 சதவீதம் மலைகளால் சூழ்ந்துள்ள இந்த மாநிலத்தில், மொத்தம் 13 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதில், தலைநகர் ஐஸ்வாலில் மட்டுமே நான்கு லட்சம் பேர் வசிக்கின்றனர்.

Image 1465667


இந்த மக்களுக்கான உணவு பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், அசாம் மாநிலம் கவுஹாத்தி, சில்சாரில் இருந்து சாலை மார்க்கமாக, தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன.

ஐஸ்வாலை தவிர, மற்ற நகரங்களில் மிக குறைவான மக்களே வசிக்கின்றனர். சில இடங்களில், 15 குடும்பங்களே ஒரு குழுவாக வசிக்கின்றனர். செங்குத்தான மலைப் பாதையில், குறுகிய சாலைகளில் லாரிகளும், கார்களும் வரிசையாக செல்கின்றன. எந்த இடத்திலும், சாலை விதிமீறல்களை பார்க்க முடியவில்லை.

சில இடங்களில் நீண்ட நேரமாக, வாகனங்கள் காத்திருந்தாலும், 'ஹாரன்' சத்தம் இல்லை. பொறுமையாக காத்திருந்து செல்லும் வாகன ஓட்டிகள் பாராட்டுக்கு உரியவர்கள்.



மலைப் பகுதிகளில் வாகனங்களை ஓட்டும் சிலர் கூறியதாவது:

எங்கள் மாநிலத்தில் சாலை போக்குவரத்து தான் பிரதானம். அன்றாட உணவு பொருட்கள் உட்பட, அனைத்து பொருட்களும் சாலை மார்க்கமாகதான் வருகின்றன. அனைத்து சாலைகளும் மலையிலேயே இருப்பதால், வாகனம் ஓட்டுவது என்பது எங்களுக்கு இயல்பாகவே பழகிய தொழிலாக இருக்கிறது.

வெளியூரில் இருந்து யார் வந்தாலும், உரிய நிறுத்தம் இல்லாத இடத்தில், வாகனங்களை நிறுத்தக் கூடாது; ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது; கட்டாயம் 'சீட் பெல்ட்' அணிய வேண்டும்; இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும் என, அறிவுறுத்துகிறோம்.

அதை நாங்களும் பல ஆண்டு காலமாக பின்பற்றுகிறோம். சாலை பாதுகாப்பு என்பது, அனைவரின் கூட்டு முயற்சி.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகம் பாதுகாப்பான மாநிலம்
ஐஸ்வாலில் உள்ள மார்க்கெட் பகுதிகளில், பெண்கள் தான் அதிகளவில் கடைகள் நடத்துகின்றனர். பெரும்பாலான ஆண்கள், வேலை நிமித்தமாக வெளிமாநிலங்களுக்கு சென்று விடுகின்றனர். மேலும், இளைஞர்கள் பலர் ராணுவத்தில் பணியாற்றி வருவதாக, உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். அதேபோல், வாரந்தோறும் ஞாயிறுகளில் ஒட்டுமொத்த கடைகளும் மூடப்படுகின்றன. பெரும்பாலானோர் சர்ச்சுகளுக்கு செல்கின்றனர்; மற்றவர்கள், பொழுதுபோக்கு இடங்களுக்கு சென்று, நேரத்தை செலவிடுகின்றனர்.
இங்குள்ள தட்பவெப்ப நிலை காரணமாக, தொடர் பழக்கமாக புகைப்பிடித்தல் இருக்கிறது. சாலைகளில் ஆண்களும், பெண்களும் அதிகளவில் புகைபிடித்து கொண்டு இருப்பதை காண முடிகிறது. இதனால் தான் என்னவோ, புற்றுநோயாளிகள் அதிகமாக இருக்கும் மாநிலமாகவும் மிசோரம் மாறி விட்டது. இந்த மக்கள், மருத்துவம் வசதி பெற, தமிழகத்தை பெரிதும் நம்புகின்றனர்.
மிசோரம் மத்திய பல்கலை பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: புற்றுநோய், இதய அறுவை சிகிச்சை, எலும்பு முறிவுக்கு மருத்துவ சிகிச்சைப் பெற, தமிழகம் செல்கின்றனர். நல்ல மருத்துவ வசதி கிடைப்பதோடு, மருத்துவ கட்டணம் ஓரளவுக்கு குறைவாக இருக்கிறது. டில்லி, மும்பை பெருநகரங்களில் தங்கி சிகிச்சை பெற்றாலும், வெளியில் தங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், அவற்றை பாதுகாப்பு இல்லாத நகரங்களாக, இப்பகுதி மக்கள் கருதுகின்றனர். தமிழகம் மிகவும் பாதுகாப்பான மாநிலம். மருத்துவ சிகிச்சைக்காக, வேலுாரில் வந்து தங்கும்போது, அங்குள்ள மக்கள் சகோதர, சகோதரிகளை போல நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.



- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us