கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., நிலம், ரொக்கம் முடக்கம்!: பண மோசடி வழக்கில் அமலாக்க துறை அதிரடி
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., நிலம், ரொக்கம் முடக்கம்!: பண மோசடி வழக்கில் அமலாக்க துறை அதிரடி
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., நிலம், ரொக்கம் முடக்கம்!: பண மோசடி வழக்கில் அமலாக்க துறை அதிரடி
ADDED : ஜூன் 30, 2024 02:49 AM

கொச்சி:கேரளாவில், கருவண்ணுார் சேவை கூட்டுறவு வங்கி ஊழலில் தொடர்புடைய பண மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அம்மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு சொந்தமான நிலம் மற்றும் 63 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வங்கி டிபாசிட்களை அமலாக்கத் துறையினர் முடக்கி உள்ளனர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, திருச்சூர் மாவட்டத்திலிருக்கும் குன்னங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ஏ.சி.மொய்தீன், 67. ஆளுங்கட்சியைச் சேர்ந்த இவர், அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
கடந்த 2010ல், திருச்சூரை தலைமையிடமாக வைத்து, கருவண்ணுார் சேவை கூட்டுறவு வங்கி செயல்பட்டது.
குற்றச்சாட்டு
அப்போது, ஏழை மக்களின் சொத்துகளை, அவர்களுக்கு தெரியாமல் அடமானம் வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு கடன் வழங்கப்பட்டதாகவும், இதன்படி, 100 கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த கடன்கள் அனைத்தும் மொய்தீன் அறிவுறுத்தலின்படி வழங்கப்பட்டதும் தெரிய வந்தது. இது குறித்து, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிந்த அமலாக்கத் துறை, மொய்தீனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் சோதனை நடத்தியது.
இந்த வழக்கில், அமலாக்கத் துறையினர் இதுவரை நான்கு பேரை கைது செய்துள்ள நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில், சிறப்பு நீதிமன்றத்தில், 55 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு சொந்தமான, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் அக்கட்சியின் ஐந்து வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த, 63 லட்சம் ரூபாயை அமலாக்கத் துறையினர் நேற்று முடக்கினர்.
இந்த நிலம், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் அலுவலகத்துக்கானது என்றும், கருவண்ணுார் சேவை கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற பயனாளிகளிடமிருந்து கைமாறாக வாங்கியது என்றும் அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடவடிக்கை
இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் எம்.வி.கோவிந்தன் நேற்று கூறியதாவது:
அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களை, பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டுவதற்கு அமலாக்கத் துறை முயற்சிக்கிறது.
கருவண்ணுார் சேவை கூட்டுறவு வங்கி வழக்கில், அமலாக்கத் துறையின் நடவடிக்கையை எதிர்த்து, அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் போராடுவோம். இது தொடர்பாக எங்களுக்கு முறைப்படி எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க அமலாக்கத் துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். அவர்கள் என்ன செய்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை.
அரசியல் அழுத்தத்தின் கீழ், பழிவாங்கும் நோக்கில் அமலாக்கத் துறையினர் செயல்படுகின்றனர். இது நல்லதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.