Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மஹா.,வில் மாவோயிஸ்ட் முக்கிய தளபதி... சரணடைந்தார்!; 60 ஆதரவாளர்களுடன் ஆயுதங்கள் ஒப்படைப்பு

மஹா.,வில் மாவோயிஸ்ட் முக்கிய தளபதி... சரணடைந்தார்!; 60 ஆதரவாளர்களுடன் ஆயுதங்கள் ஒப்படைப்பு

மஹா.,வில் மாவோயிஸ்ட் முக்கிய தளபதி... சரணடைந்தார்!; 60 ஆதரவாளர்களுடன் ஆயுதங்கள் ஒப்படைப்பு

மஹா.,வில் மாவோயிஸ்ட் முக்கிய தளபதி... சரணடைந்தார்!; 60 ஆதரவாளர்களுடன் ஆயுதங்கள் ஒப்படைப்பு

UPDATED : அக் 16, 2025 07:45 AMADDED : அக் 15, 2025 03:34 AM


Google News
Latest Tamil News
பிஜாப்பூர்: மஹாராஷ்டிராவின் கட்சிரோலியில், இடதுசாரி மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தளபதி வேணுகோபால் ராவ், தன் ஆதரவாளர்கள் 60 பேருடன் போலீசில் நேற்று சரணடைந்தார்.

அவர்கள் தங்கள் ஆயுதங்களையும் ஒப்படைத்தனர். இவரைப் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு 10 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே, சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் நக்சல்கள் பதுக்கி வைத்திருந்த, 51 கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஏராளமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதன் வாயிலாக, மிகப்பெரிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்கள் ஆதிக்கம் உள்ளது.

இந்த அமைப்பினரை, 2026ம் ஆண்டு மார்ச்சுக்குள் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நக்சல் செயல் பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையை மத்திய அரசுடன், அந்தந்த மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன.

முறியடிப்பு



இதன்படி, சத்தீஸ்கரின் பிஜாப்பூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கர்ரேகுட்டா மலைப்பகுதிகளில் நக்சல் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, சிறப்பு அதிரடி படை, 'கோப்ரா' உள்ளிட்ட பாதுகாப்பு படையினர், பிஜாப்பூர் போலீசாருடன் இணைந்து அங்குள்ள வனப்பகுதி மற்றும் கர்ரேகுட்டா மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, நக்சல்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுத குவியல்களை பறிமுதல் செய்தனர்.

இதில், 51 கையெறி குண்டுகள், 100 பண்டல் அலுமினியம் ஒயர், 50 ஸ்டீல் பைப்புகள், 40 இரும்பு தகடுகள், 20 இரும்பு ஷீட்டுகள் போன்றவற்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

இவை அனைத்தும், ஐ.இ.டி., எனப்படும், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

இதுதவிர, கண்ணி வெடிகளையும் பறிமுதல் செய்தனர். வெடிகுண்டு செயலிழப்பு குழுவினரின் உதவியுடன் அவற்றை செயலிழக்க செய்தனர்.

இதுகுறித்து பிஜாப்பூர் மாவட்ட எஸ்.பி., ஜிதேந்திர யாதவ் கூறுகையில், ''கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை, பெரும் நாச வேலைக்கு பயன்படுத்த நக்சல்கள் திட்டமிட்டு இருந்தது தெரியவந்துள்ளது. அவர்களின் மிகப் பெரிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

கடந்த, 2024 முதல், பிஜாப்பூர் மாவட்டத்தில், 38 புதிய பாதுகாப்பு முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, இப்பகுதியில் நக்சல் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதுவரை 599 நக்சல்கள் சரணடைந்துள்ளதாகவும், 196 பேர் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டுள்ளதாகவும், 973 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நக்சல் தளபதி சரண்


இதற்கிடையே, மஹாராஷ்டிராவின் கட்சிரோலியில், தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பின் தளபதி சோனு என்ற மல்லோஜுலா வேணுகோபால் ராவ், 68, நக்சல்கள் 60 பேருடன் போலீசில் சரணடைந்தார். இவர்கள், தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பான இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் அமைப்பின் செய்தித் தொடர்பாளராக இருந்த வேணுகோபால், வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் நக்சல் இயக்கத்தினருக்கும், வெளி உலகத்துக்கும் தொடர்பில் இருக்க முக்கிய நபராக இருந்தார்.

தெலுங்கானாவை பூர்விகமாக கொண்ட வேணுகோபால், பி.காம்., படித்துள்ளார். இவர் மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த, 1984ல் கட்சிரோலி பகுதியில் கமாண்டராக நக்சல் இயக்கத்தில் வேணுகோபால் இணைந்தார். மஹாராஷ்டிரா - சத்தீஸ்கர் எல்லையில் நக்சல் இயக்கத்தை உயிர்ப்புடன் இருக்க செய்ததில் பெரும் பங்கு இவருக்கு உண்டு.

ரூ.10 கோடி


இவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவருக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என பல்வேறு மாநில அரசுகள் அறிவித்திருந்தன.

இந்நிலையில், நக்சல் இயக்கத்தில் உட்பூசல் ஏற்பட்டதுடன், அவர்களின் தியாக உணர்வுக்கு உரிய மதிப்பு அளிப்பதில்லை எனக்கூறி சமீபத்தில் அப்பதவியை வேணுகோபால் ராஜினாமா செய்தார்.

சக நக்சல்களின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்த அவர், இயல்பு வாழ்கைக்கு திரும்ப முடிவு செய்து, தன் ஆதரவாளர்கள் 60 பேருடன் நேற்று போலீசில் சரணடைந்தார்.

போலீசாரை கொன்ற நக்சல் மூணாறில் கைது

ஜார்க்கண்ட் மாநிலத்தில், 2021 மார்ச்சில் மூன்று போலீசாரை மாவோயிஸ்ட்டுகள் வெடிகுண்டு வீசி கொலை செய்தனர். அச்சம்பவத்தில், 18 பேர் கைதான நிலையில், ஹர்சுவான் மாவட்டம், தால்பங்கா கிராமத்தை சேர்ந்த ஷகன்டுட்டிதினாபூ, 30, என்பவர் தலைமறைவானார். இவர் பணம், ஆயுதம் வழங்கி கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அவரை பற்றி என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்தனர். அவர், கேரளாவின் மூணாறில் கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான கூடாரவிளை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் மனைவி, பிள்ளையுடன் தங்கி ஒன்றரை ஆண்டுகளாக தேயிலை தோட்ட தொழிலாளியாக வேலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ஜார்க்கண்டை சேர்ந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் மூன்று பேர் கொண்ட குழுவினர், நேற்று முன்தினம் இரவு ஷகன்டுட்டிதினாபூவை கைது செய்தனர். அவரை நேற்று பலத்த பாதுகாப்புடன் தேவிகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, எர்ணாகுளத்தில் உள்ள என்.ஐ.ஏ., நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us