Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ கைதான சட்டக்கல்லுாரி மாணவிக்கு பல எம்.பி.,க்கள் ஆதரவு குரல்

கைதான சட்டக்கல்லுாரி மாணவிக்கு பல எம்.பி.,க்கள் ஆதரவு குரல்

கைதான சட்டக்கல்லுாரி மாணவிக்கு பல எம்.பி.,க்கள் ஆதரவு குரல்

கைதான சட்டக்கல்லுாரி மாணவிக்கு பல எம்.பி.,க்கள் ஆதரவு குரல்

UPDATED : ஜூன் 02, 2025 04:47 AMADDED : ஜூன் 02, 2025 01:51 AM


Google News
Latest Tamil News
கொல்கட்டா: மேற்கு வங்க போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சட்டக்கல்லுாரி மாணவிக்கு, நெதர்லாந்து எம்.பி., கீர்த் வைல்டர்ஸ், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உட்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மஹாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்தவர் ஷர்மிஸ்தா பனோலி, 22. அங்குள்ள சட்டக்கல்லுாரியில் நான்காம் ஆண்டு சட்டம் படித்து வருகிறார். இவர், பாகிஸ்தானுக்கு எதிரான 'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் வீடியோ வெளியிட்டார்.

அதில், ஆப்பரேஷன் சிந்துார் பற்றி வாய் திறக்காத பாலிவுட் நடிகர், நடிகையரையும், முஸ்லிம் மதத்தையும் கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவருக்கு கொலை மிரட்டல் அழைப்புகள் வரத் துவங்கின. மேற்கு வங்கத்தின் கொல்கட்டா போலீசில் அளித்த புகாரின்படி, ஷர்மிஸ்தா மீது வழக்குப்பதிவு செய்தது.

இதைத்தொடர்ந்து, தான் வெளியிட்ட வீடியோவை நீக்கிய அவர், 'நான் யாரையும் வேண்டுமென்றே காயப்படுத்த நினைக்கவில்லை. இனிமேல், என் கருத்துகளில் எச்சரிக்கையாக இருப்பேன்' என அறிக்கை வெளியிட்டார். எனினும், ஹரியானா மாநிலம் குருகிராமில் இருந்த ஷர்மிஸ்தாவை, கொல்கட்டா போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்நிலையில், ஷர்மிஸ்தாவுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் 'பார்ட்டி பார் ப்ரீடம்' என்ற கட்சியின் எம்.பி., கிரீத் வைல்டர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவு:

பாகிஸ்தான் பற்றிய உண்மையை தெரிவிக்கும் ஷர்மிஸ்தாவை தண்டிக்கக்கூடாது. இந்த கைது நடவடிக்கை, பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான செயல். எனவே, கைது செய்யப்பட்ட ஷர்மிஸ்தாவை உடனே விடுதலை செய்ய வேண்டும். கைதான ஷர்மிஸ்தாவை விடுவிக்க, பிரதமர் மோடி உதவ வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் ஷர்மிஸ்தாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் கூறுகையில், 'தான் தெரிவித்த கருத்துக்கு ஷர்மிஸ்தா மன்னிப்பு கேட்ட பின்பும், அவரை கொல்கட்டா போலீசார் கைது செய்தது கண்டிக்கத்தக்கது.

மதச்சார்பின்மை என்பது சிலருக்கு கேடயமாகவும், மற்றவர்களுக்கு வாளாகவும் இருக்காது. அது இருவழிப் பாதையாக இருக்க வேண்டும். மேற்கு வங்க போலீசாரின் செயல்பாட்டை, நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, அனைவருக்கும் நியாயமாகச் செயல்படுங்கள்' என, பதிவிட்டுள்ளார்.

ஷர்மிஸ்தா கைது பற்றி காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சமூக வலைதளத்தில் கூறுகையில், 'இதுபோன்ற சமூக ஊடகப் பதிவுகளால், சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுத்தது என்பது தெளிவாக நிரூபிக்கப்படாவிட்டால், போலீசாரின் அதிகாரங்களை மாநில அரசு தவறாகப் பயன்படுத்துவதாகவே கருத முடியும்' என, குறிப்பிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us