திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை
திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை
திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை
ADDED : ஜூன் 04, 2025 08:45 PM
புதுடில்லி:திருமணத்தை எதிர்த்தவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
பீகாரைச் சேர்ந்தவர் அகிலேஷ்,24. பட்டதாரி. புதுடில்லி துவாரகாவில் வசித்தார். இவரது உறவினர் நிதிஷ் தாஸ், உறவினர்களிலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால், அதற்கு அகிலேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அந்தப் பெண்ணை திருமணம் செய்யக் கூடாது என நிதிஷை மிரட்டியும் உள்ளார்.
மே மாதம், 8ம் தேதி துவாரகா ஜெ.ஜெ. காலனியில் உள்ள நிதிஷ் வீட்டுக்கு அகிலேஷ் வந்தார். அப்போது, திருமணம் தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நிதிஷ், இரும்புக் கம்பியால் அகிலேஷை சரமாரியாக தாக்கினார். மேலும், அவரது கழுத்தை இறுக்கினார். மூச்சுத் திணறி சரிந்த அகிலேஷ் அதே இடத்தில் உயிரிழந்தார். அகிலேஷ் உடலை அவரது வீட்டுக்கு வெளியில் வீசி விட்டு நிதிஷ் தப்பினார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த துவாரகா போலீசார், கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நிதிஷ் குற்றவாளி என்பதை கண்டுபிடித்தனர். நிதிஷைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
மே, 11ம் தேதி கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில் தனிப்படையினர் பீஹார் விரைந்தனர். அங்கு தேடுதல் வேட்டை நடத்தி, அவரது சொந்த கிராமத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த நிதிஷ் கைது செய்யப்பட்டார். விசாரணை நடந்து வருகிறது.