மெட்ரோ ரயிலில் பெண்களை வீடியோ எடுத்தவர் தலைமறைவு
மெட்ரோ ரயிலில் பெண்களை வீடியோ எடுத்தவர் தலைமறைவு
மெட்ரோ ரயிலில் பெண்களை வீடியோ எடுத்தவர் தலைமறைவு
ADDED : மே 22, 2025 12:51 AM
பெங்களூரு: மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில், மெட்ரோ ரயில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில், மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் இளம்பெண்களை ஆபாசமான கோணங்களில் வீடியோ எடுத்து, 'மெட்ரோ சிக்ஸ்' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அந்த இன்ஸ்டாகிராம் கணக்கை 6,100 பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பதிவிட்டது குறித்து, சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ., - எம்.பி., மோகன், தன் எக்ஸ் வலைதளத்தில், 'மெட்ரோ ரயிலில் இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ, புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதும், அந்த கணக்கை 5,000க்கும் மேற்பட்டோர் பின்தொடர்வதும் அதிர்ச்சியாக உள்ளது.
'இது கடுமையான குற்றம். பெங்களூரு போலீசார் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பதிவிட்டு இருந்தார்.
எதிர்ப்பு கிளம்பியதால் வீடியோக்கள், இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து அழிக்கப்பட்டன. ஆனாலும், வீடியோவை பதிவிட்ட அடையாளம் தெரியாத வாலிபர் மீது, பனசங்கரி போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.