பெண்ணிடம் ஆன்லைனில் முதலீடு என கூறி ரூ.29 லட்சம் மோசடி செய்தவர் கைது
பெண்ணிடம் ஆன்லைனில் முதலீடு என கூறி ரூ.29 லட்சம் மோசடி செய்தவர் கைது
பெண்ணிடம் ஆன்லைனில் முதலீடு என கூறி ரூ.29 லட்சம் மோசடி செய்தவர் கைது
ADDED : ஜூன் 17, 2025 08:32 PM
புதுடில்லி:'ஆன்லைன் நிறுவனங்களில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும்' என பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி, அவரிடம், 29 லட்ச ரூபாயை ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டார்.
சோத்மால் சைனி என்ற நபர், ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியை சேர்ந்தவர். பணக்கார பெண் ஒருவரை தொடர்பு கொண்ட அவர், ஆன்லைனில் முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார்.
அதை உண்மை என நம்பிய அந்த பெண், 29 லட்சம் ரூபாயை பல தவணைகளாக முதலீடு செய்தார். அவரின் வங்கிக்கணக்கில் பணம் சேர்ந்து வருகிறது என்பதை, போலி இணையதளம் வாயிலாக காட்டினார்.
ஒரு கட்டத்தில், வங்கியிலிருந்து அந்த பணத்தை அந்த பெண் எடுக்க முயன்ற போது, உண்மையான வங்கிக்கணக்கில் அவர் எதிர்பார்த்த பணம் இல்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண், டில்லி போலீசில் புகார் கூறினார்.
தென் மேற்கு டில்லி பகுதியின் டி.எஸ்.பி., அமித் கோயல் கூறியதாவது:
அந்த பெண்ணிடம் பேசிய சோத்மால் சைனி, ஆன்லைன் பிளாட்பாரங்களில் முதலீடு செய்வது லாபகரமானது; பாதுகாப்பானது என கூறினார். அதை உண்மை என நம்பிய அந்த பெண், பல தவணைகளாக, 29 லட்ச ரூபாய் அளவுக்கு முதலீடு செய்தார்.
ஒவ்வொரு முறை அந்த பெண் முதலீடு செய்யும் போதும், போலி இணையதளத்தில் அவரின் பணம் உயர்ந்து வருவதை காட்டினார். அவரிடம் காட்டிய இணையதள தகவல், போலியானது என்பதை அறியாமல், தொடர்ந்து அந்த பெண் முதலீடு செய்து வந்தார். ஒரு கட்டத்தில் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், போலீசில் புகார் அளித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் மற்றும் சிகார் போன்ற நகரங்களில் ஆடம்பர லாட்ஜ்களில் வசித்த சோத்மால் சைனியை கைது செய்து, விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.