தோல்வியை ஏற்க முடியாத தலைவர் ராகுல்: மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் பதிலடி
தோல்வியை ஏற்க முடியாத தலைவர் ராகுல்: மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் பதிலடி
தோல்வியை ஏற்க முடியாத தலைவர் ராகுல்: மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் பதிலடி
ADDED : ஜூன் 09, 2025 12:17 AM

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் குறித்து, ஆங்கில நாளிதழில் கட்டுரை எழுதி, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு, மராத்தி நாளிதழில் கட்டுரை எழுதி, அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
மஹாராஷ்டிராவில், கடந்தாண்டு நவம்பரில் 288 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய மஹாயுதி கூட்டணி, 235 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.
குற்றச்சாட்டு
காங்., உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய மஹா விகாஸ் அகாடி கூட்டணி, 50க்கும் குறைவான இடங்களையே கைப்பற்றி, எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெறவில்லை.
இந்த தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலே, தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகிறார்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் குறித்து, 'மேட்ச் பிக்சிங் மஹாராஷ்டிரா' என்ற பெயரில், ஆங்கில நாளிதழில், சமீபத்தில் ராகுல் கட்டுரை எழுதினார்.
அதில், மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், மேட்ச் பிக்சிங் செய்து பா.ஜ., வெற்றி பெற்றதாகவும், தேர்தல்களில் எப்படி முறைகேடு செய்ய வேண்டும் என்ற வரைபடம் அக்கட்சியிடம் இருப்பதாகவும், பீஹாரில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலிலும் இதே பாணியை பா.ஜ., பின்பற்ற உள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதை மறுத்த தலைமை தேர்தல் கமிஷன், 'பாதகமான தீர்ப்புக்கு பின், தேர்தல் கமிஷனை அவதுாறு செய்வது முற்றிலும் அபத்தமானது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், சட்டத்தின் ஆட்சிக்கு அவமானம்' என, தெரிவித்தது.
இந்நிலையில், ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மராத்தி நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதி உள்ளார்.
மவுனம் காப்பது ஏன்?
அதில் அவர் கூறியுள்ளதாவது:
மக்களை சமாதானப்படுத்த முடியாவிட்டால், அவர்களை குழப்புவதே ராகுலின் கொள்கையாக உள்ளது.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர், அவர்கள் வழங்கிய தீர்ப்பையும் நிராகரிப்பதாக கூறுகிறார்.
ராகுலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த காங்கிரசையும் மக்கள் நிராகரித்து உள்ளனர்.
அதனால் தான், தற்போது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை குறை கூறி, ஜனநாயகத்தின் பிம்பத்தை அக்கட்சியினர் உடைக்கின்றனர்.
மஹாராஷ்டிராவில் தேர்தல் நடக்கும் போதெல்லாம், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை குறை கூறுவது வழக்கமாகி விட்டது.
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் எந்த முறைகேடும் செய்ய முடியாது என, நம் தேர்தல் கமிஷனும் பல முறை விளக்கம் அளித்து விட்டது. அது தொடர்பான மனுக்களையும் உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்து விட்டது.
காங்., வெற்றி பெறும் மாநிலங்களில் மட்டும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்கின்றனவா? அப்போது மட்டும், காங்., மவுனம் காப்பது ஏன்?
தோல்விக்கான உண்மையான காரணத்தை கண்டறியாமல், சாக்கு போக்குகளை ராகுல் கூறி வருகிறார். மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் முட்டாள்கள் அல்ல. இனியும் அவர்களை ராகுலும், அவரது கட்சியினரும் ஏமாற்ற முடியாது. தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத தலைவராக ராகுல் இருக்கிறார்.
இவ்வாறு கட்டுரையில் பட்னவிஸ் குறிப்பிட்டுஉள்ளார்.