கோல்கட்டாவை புரட்டி எடுக்கும் கனமழைக்கு 9 பேர் பலி; 30 விமானங்கள் ரத்து
கோல்கட்டாவை புரட்டி எடுக்கும் கனமழைக்கு 9 பேர் பலி; 30 விமானங்கள் ரத்து
கோல்கட்டாவை புரட்டி எடுக்கும் கனமழைக்கு 9 பேர் பலி; 30 விமானங்கள் ரத்து

கோல்கட்டா: கோல்கட்டாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். கோல்கட்டா விமான நிலையத்தில் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.எங்கு பார்த்தாலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு, போக்குவரத்தும் முடங்கி உள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
துர்கா பூஜைக்கு தயாராகி வரும் கோல்கட்டா நகரம், தற்போது கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு கோல்கட்டாவில் 200 மிமீ மழையும், தெற்கு கோல்கட்டாவில் 180 மிமீ மழையும் பதிவாகி இருக்கிறது.
கனமழை எதிரொலியாக தண்ணீர் தேங்கியதால் மஹாநாயக் உத்தம்குமார் மற்றும் ரவிந்திர சரேபார் ரயில் நிலையங்கள் இடையே ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்து எப்போது தொடங்கும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறி உள்ளனர். தண்டவாளங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை எதிரொலியாக தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதுவரை மழைக்கு 7 பேர் பலியாகி உள்ளனர். ஹவுராவில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. சாலைகளில் தேங்கிய தண்ணீரை அகற்றும் நடவடிக்கைளில் ஊழியர்கள் இறங்கி உள்ளதாக கோல்கட்டா மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை நிலவுவதால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டு உள்ளது. எனவே, பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்று இண்டிகோ. ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன.
மழை காரணமாக, விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்நிறுவனங்கள் கூறியுள்ளன.
இதனிடையே கனமழை செப்.26ம் தேதி வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.