Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ வயநாடு நிலச்சரிவு: அடையாளம் தெரியாத உடல்களுக்கு ஒரே இடத்தில் இறுதிச் சடங்கு

வயநாடு நிலச்சரிவு: அடையாளம் தெரியாத உடல்களுக்கு ஒரே இடத்தில் இறுதிச் சடங்கு

வயநாடு நிலச்சரிவு: அடையாளம் தெரியாத உடல்களுக்கு ஒரே இடத்தில் இறுதிச் சடங்கு

வயநாடு நிலச்சரிவு: அடையாளம் தெரியாத உடல்களுக்கு ஒரே இடத்தில் இறுதிச் சடங்கு

ADDED : ஆக 05, 2024 05:33 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வயநாடு: வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த அடையாளம் தெரியாத, 29 உடல்கள் மற்றும் 85 உடல் உறுப்புகளுக்கு, ஒரே இடத்தில் இறுதிச் சடங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆறு நாட்களாக நடந்த மீட்புப் பணிகளில், 1,000த்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, 206 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

அதே நேரத்தில், 219 உடல்களும், 143 உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன; 80க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. அடையாளம் காண முடியாத உடல்களுக்கு அரசு சார்பில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டு, அடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, வயநாட்டின் புதுமலை பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த இரண்டு நாட்களில், அடையாளம் தெரியாத ஆறு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதைத் தவிர, 29 உடல்கள் மற்றும் 85 உடல் உறுப்புகளும் அங்கு அடக்கம் செய்யப்பட உள்ளன. அனைத்து மத பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, இந்த உடல்கள் மற்றும் உடல் உறுப்புகள் அடக்கம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, ஆறாவது நாளாக மீட்பு மற்றும் தேடுதல் பணி நேற்றும் நடந்தது.

வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு வழியாக செல்லும் சாலியாறு நதியின், 40 கி.மீ., துாரப் பகுதிகளில் பல உடல்கள் கிடைத்துள்ளன. அதனால், நதியின் பாதையில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடக்கிறது.

நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முண்டக்கை, சூரல்மலை ஆகியவை, ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அங்கு தேடுதல் வேட்டையில் மீட்புப் படையினர் தனித்தனி குழுவாக பிரிந்து ஈடுபட்டனர்.

எந்த பகுதியில், உடல்கள் மீட்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதோ, முதலில் அங்கு தேடுதல் பணி நடக்கும் என, மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் முகமது ரியாஸ் நேற்று தெரிவித்தார்.

இதற்கிடையே, வயநாடு நிலச்சரிவு தொடர்பான தற்போதைய நிலை, ஏற்பட்ட பாதிப்பு ஆகியவை குறித்து மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன், பிரதமர் மோடியிடம் நேற்று அறிக்கை அளித்தார்.

தேசிய பேரிடராக அறிவிக்காதது ஏன்?

வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் உட்பட பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்முரளீதரன், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:தேசிய பேரிடர் என்பது முறையாக வரையறுக்கப்படவில்லை. அந்தந்த சம்பவத்துக்கு ஏற்ப அது குறித்து ஆராயப்படுகிறது. அதே நேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2013ல் பார்லிமென்டில் இது தொடர்பாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது உள்துறை இணையமைச்சராக இருந்த முள்ளப்பள்ளி ராமசந்திரன் அந்தப் பதிலை அளித்துள்ளார். அதில், இயற்கை சீற்றங்களை, தேசிய பேரிடராக கருத முடியாது என்று கூறப்பட்டுள்ளது.அதனால், தற்போது இதைவைத்து சிலர் அரசியல் குழப்பம் செய்ய முயற்சிக்கின்றனர். இதுபோன்ற நேரங்களில், அரசியல் ரீதியாக, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதற்கிடையே, கேரள அரசு இந்த விபத்தை மாநில பேரிடராக அறிவித்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us