சாக்கு மூட்டையில் பணம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா இடமாற்றம்
சாக்கு மூட்டையில் பணம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா இடமாற்றம்
சாக்கு மூட்டையில் பணம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா இடமாற்றம்

புதுடில்லி: நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குழுவான கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில், கத்தை கத்தையான ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்த நிலையில் இருக்கும் வீடியோ சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கத்துடன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இதற்கிடையே, நீதிபதி வர்மாவுக்கு தற்போதைக்கு எந்த நீதித்துறைப் பணிகளையும் ஒதுக்க வேண்டாம் என்று தலைமை நீதிபதி கன்னா பரிந்துரைத்தார்.
இந்நிலையில், இன்று டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு நீதித்துறை பணிகள் தரக்கூடாது என்று உத்தரவிட்டார். இது குறித்து தலைமை நீதிபதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமீபத்திய நிகழ்வுகளை கருத்தில் கொண்டு நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நீதித்துறைப் பணிகள் மறு உத்தரவு வரை திரும்ப பெறப்படுகின்றன'. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மீண்டும் அவர் ஏற்கனவே பணியில் இருந்த அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. மார்ச் 20 மற்றும் மார்ச் 24 ஆகிய இரு நாட்கள் நடந்த கொலீஜியம் கூட்டங்களில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் எடுத்த முடிவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
நாளை 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.