வீட்டில் மூட்டை மூட்டையாக சிக்கிய பணக்கட்டுகள் நீதிபதி யஷ்வந்தை பணிநீக்க பரிந்துரை
வீட்டில் மூட்டை மூட்டையாக சிக்கிய பணக்கட்டுகள் நீதிபதி யஷ்வந்தை பணிநீக்க பரிந்துரை
வீட்டில் மூட்டை மூட்டையாக சிக்கிய பணக்கட்டுகள் நீதிபதி யஷ்வந்தை பணிநீக்க பரிந்துரை
ADDED : ஜூன் 20, 2025 12:41 AM

புதுடில்லி : வீட்டில் மூட்டை மூட்டையாக பணக்குவியல்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்த விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணிநீக்கம் செய்யுமாறு விசாரணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், மார்ச் 14ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர். அப்போது, பாதி எரிந்த நிலையில், 500 ரூபாய் நோட்டுக்கட்டுகள் அங்கிருந்த மூட்டைகளில் கண்டெடுக்கப்பட்டன.
இது தொடர்பான புகார்களை யஷ்வந்த் வர்மா மறுத்தார். இதுகுறித்து விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டார்.
விசாரணை
அவர்கள் நடத்திய விசாரணையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றம் நிரூபணமானது. இதையடுத்து, அவரை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி பதவியை ராஜினாமா செய்யும்படி, யஷ்வந்த் வர்மாவை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. ஆனால் அதை ஏற்காமல் அவர் முரண்டு பிடித்தார்.
அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்கம் செய்ய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரிந்துரைத்தது.
இருப்பினும், பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை இதுவரை துவங்கவில்லை. அதேசமயம், பார்லி., மழைக்கால கூட்டத்தில் யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், யஷ்வந்த் வர்மாவை பணிநீக்கம் செய்யுமாறு, பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ்.சந்தவாலியா, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகிய மூன்று பேர் அடங்கிய விசாரணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
ஆதாரங்கள்
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நீதிபதி யஷ்வந்த் குற்றம் புரிந்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. அவரது வீட்டில் பணமூட்டைகள் இருந்ததற்கான சாட்சிகளும், வீடியோ ஆதாரங்களும் உள்ளன. நீதிபதியின் மகள், தீயணைப்பு வீரர்கள், போலீசார் என மொத்தம், 55 பேரிடம் சாட்சியம் பெறப்பட்டது.
அனைத்தும் அவருக்கு எதிராகவே உள்ளன. 'என் வாழ்நாளில் இவ்வளவு ரூபாய் நோட்டுகளை நான் பார்த்ததே இல்லை' என, சாட்சி அளித்த ஒருவர் கூறியுள்ளார்.
நீதிபதியின் தனி செயலர் ஒருவர், பணம் குறித்து ஏதும் சொல்லக்கூடாது என்று தீயணைப்பு வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்.
நடவடிக்கை
மேலும், விசாரணைக்குழு ஆய்வு செய்வதற்கு முன்பாக, தீ விபத்து ஏற்பட்ட அறையில் இருந்த ரூபாய் நோட்டுகள் அவரது குடும்பத்தினரால் அகற்றப்பட்டு விட்டன.
ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்தது குறித்து போலீசாரிடமோ அல்லது தலைமை நீதிபதியிடமோ யஷ்வந்த் வர்மா புகார் அளிக்காதது ஏன்?
நீதித்துறையின் மீது பொதுமக்கள் வைத்துஇருக்கும் நம்பிக்கை, நீதிபதிகளின் நடத்தையுடன் நேரடியாக தொடர்புடையது. ஆகையால், அந்த நம்பிக்கைக்கு குந்தகம் வராமல் இருக்க, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
யஷ்வந்த் வர்மாவின் நடத்தை இயற்கைக்கு மாறாக இருந்துள்ளது. அவர் மீதான புகார் உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அவரை பதவியிலிருந்து நீக்க பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.