11 பேர் உயிரிழந்த நிலையில் தேவையா இந்த கொண்டாட்டம்; ரசிகர்கள் கொந்தளிப்பு
11 பேர் உயிரிழந்த நிலையில் தேவையா இந்த கொண்டாட்டம்; ரசிகர்கள் கொந்தளிப்பு
11 பேர் உயிரிழந்த நிலையில் தேவையா இந்த கொண்டாட்டம்; ரசிகர்கள் கொந்தளிப்பு

பெங்களூரு: பெங்களூரு கிரிக்கெட் அணியின் வெற்றிக் கொண்டாட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், அதைப்பற்றி கவலைப்படாமல் ஸ்டேடியத்தில் விழா தொடர்ந்து நடத்தியது, பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை தோற்கடித்து பெங்களூரு அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனை பெங்களூரு அணி ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். கோப்பையை வென்ற கையோடு, பெங்களூரு திரும்பிய வீரர்களை அரசின் சார்பில் கவுரவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, பெங்களூரு அணி வீரர்கள் சின்னசாமி மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது, அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.
இதனால், கூட்டநெரிசல் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு நிலவியது. இதில், 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இதனிடையே, இந்த சம்பவத்திற்கு பெங்களூரு மக்களிடம் துணை முதல்வர் சிவகுமார் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஆனால், இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டு, சின்னசாமி மைதானத்திற்கு வெளியே களேபரம் ஏற்பட்டுள்ள நிலையிலும், மைதானத்திற்கு உள்ளே திட்டமிட்டபடி, வீரர்களை கவுரவிக்கும் விழாவை கர்நாடகா கிரிக்கெட் சங்கம் நடத்தியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் செத்து மடிந்த நிலையிலும், நிகழ்ச்சியை ரத்து செய்யாமல், பெங்களூரு வீரர்கள் வீர உரையாற்றியது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. மேலும், மக்களின் உயிர் மீது இவ்வளவு தான் அக்கறையா என்று எல்லாம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் மீது பொதுமக்கள் ஏராளமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில், இந்த சம்பவம் மேலும் விமர்சனங்களை எழச் செய்துள்ளது.
இதனையடுத்து பெங்களூரு அணியை விமர்சித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மாநில அரசுக்கும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.