Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ வயதான பெற்றோர் செலவுக்கு மாதம் ரூ.10,000 போதுமா? சட்டத்தை திருத்த மத்திய அரசுக்கு கோர்ட் பரிந்துரை

வயதான பெற்றோர் செலவுக்கு மாதம் ரூ.10,000 போதுமா? சட்டத்தை திருத்த மத்திய அரசுக்கு கோர்ட் பரிந்துரை

வயதான பெற்றோர் செலவுக்கு மாதம் ரூ.10,000 போதுமா? சட்டத்தை திருத்த மத்திய அரசுக்கு கோர்ட் பரிந்துரை

வயதான பெற்றோர் செலவுக்கு மாதம் ரூ.10,000 போதுமா? சட்டத்தை திருத்த மத்திய அரசுக்கு கோர்ட் பரிந்துரை

ADDED : செப் 12, 2025 12:41 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு:'மத்திய அரசு 2007ல் கொண்டு வந்த, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, கர்நாடக உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

பிள்ளைகளால் கைவிடப்படும் மூத்த குடிமக்களை பாதுகாக்க, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல சட்டத்தை, மத்திய அரசு, 2007ல் கொண்டு வந்தது. அச்சட்டத்தின்படி பராமரிப்பு தொகை கேட்டு தீர்ப்பாயத்தை மூத்த குடிமக்கள் நாடும் போது, அதிகபட்சமாக, 10,000 ரூபாய் வரை மட்டுமே வழங்க பிள்ளைகளுக்கு தீர்ப்பாயங்களால் உத்தரவிட வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

இது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுத்தது. இந்நிலையில், கர்நாடகாவில் பெற்றோருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கக் கோரி, சுனில் போரா என்பவருக்கு போலீஸ் உதவி ஆணையர் ஒருவர் உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து, சுனில் போரா என்பவர் தொடர்ந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:

இன்றைய பொருளாதார சூழலில், மாதம் 10,000 ரூபாய் என்பது வயதான பெற்றோர்களின் செலவுகளுக்கு போதுமானதாக இருக்காது. எனவே, பெற்றோரின் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் சட்டத்தில் உள்ள 9வது பிரிவை திருத்துமாறு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறோம்.

ஒரு நாட்டின் உண்மையான சொத்து, பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் மதிப்பிடப்படக்கூடாது. பெற்றோரை, அவர்களது வாரிசுகள் எப்படி நடத்துகின்றனர் என்பதை வைத்தே மதிப்பிட வேண்டும்.

கடந்த 2007 முதல், விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. அப்படி இருக்கும்போது, 10,000 ரூபாய் மட்டுமே பராமரிப்பு செலவுக்கு வழங்க வேண்டும் என்ற விதி எப்படி பொருந்தும்? உணவுப்பொருட்கள் விலை, வீட்டு வாடகை, மருத்துவ செலவு பன்மடங்கு அதிகரித்து விட்டன.

ஆனாலும், பெற்றோருக்கு வழங்க வேண்டிய மாத பராமரிப்பு செலவுக்கான உச்ச வரம்பு இதுவரை உயர்த்தப்படவில்லை. இந்த பணத்தை கொண்டு, இன்றைய காலக்கட்டத்தில் நிச்சயம் தினசரி செலவுகளை சமாளிக்கவே முடியாது.

கடந்த, 2019ல் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தபோதும், 10,000 ரூபாய் என்ற உச்ச வரம்பு மாற்றி அமைக்கப்படவே இல்லை. 2019ம் ஆண்டு திருத்தச் சட்டத்தில் உச்சவரம்பை நீக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டது.

தவிர, மூத்த குடிமக்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கு ஏற்ற வகையில் போதிய தொகையை தீர்ப்பாயங்கள் நிர்ணயித்துக் கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், அந்த பரிந்துரை இதுவரை ஏற்கப்படவில்லை.

மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தில், உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டதால், மாநில அரசுகளாலும், 10,000 ரூபாய்க்கு மேல் வழங்குவதற்கான விதியை உருவாக்க முடியவில்லை. எனவே, இந்த சட்டத்தில் உரிய திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என, மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us